வாணாபுரம் பகுதியில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம்
வாணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் ஏற்படுவதால் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
வாணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் ஏற்படுவதால் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
விவசாயம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு மற்றும் வெறையூர் உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.. அந்த வகையில் இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து, கம்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதி, மலைப்பகுதி மற்றும் தைலமர காடுகள் படர்ந்து காணப்படுகிறது. விவசாயம் வனப்பகுதியை சார்ந்து இருப்பதால் வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகள் எளிதில் விவசாய நிலத்திற்குள் வந்து விடுகிறது.
குறிப்பாக தச்சம்பட்டு, கண்ணமடை காப்புக்காடுகள், விருது விளங்கினான், வரகூர், பெருங்குளத்தூர், காப்புக்காடுகள், வாணாபுரம் வனப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மான்கள், காட்டுபன்றிகள் வசித்து வருகிறது.
வனப்பகுதிகளில் உணவு இல்லாத காரணத்தினால் உணவு தேடி அவ்வப்போது விவசாய நிலங்களுக்கு வருகிறது. மான், மனிதர்களை கண்டால் அச்சத்துடன் சென்றுவிடும். ஆனால் காட்டு பன்றிகள் கரும்பு வயலுக்குள் சென்றால் எப்பகுதியில் இருக்கிறது என்று விவசாயிகள் கண்டறிய முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர்.
காட்டு பன்றிகள் வெளியே வருவதில்லை
இந்த காட்டு பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் சென்றால் பயிர்களை முழுவதும் தின்று விடுவது மட்டுமல்லாமல் சேதம் ஏற்படுத்தி வருகிறது. கரும்பு வயலுக்குள் செல்லும் காட்டு பன்றிகள் அவ்வளவு எளிதில் வெளியேவருவது கிடையாது. கரும்புகளை தின்றுவிட்டு அங்கேயே தங்கி விடுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வனப்பகுதியை சார்ந்த விவசாய நிலங்கள் உள்ளது. இப்பகுதிகளில் கரும்புகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வருகிறோம். வனவிலங்குகளை எந்த விதத்திலும் துன்புறுத்துவோ அல்லது வேட்டையாடவோ கூடாது என்பதற்காக நாங்கள் அப்படியே விட்டு விடுகிறோம். இதனால் பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்து வருவது மட்டுமல்லாமல் செலவு செய்த தொகைகள் கூட எடுக்க முடியவில்லை என்று வேதனையாக இருக்கிறது.
தடுப்பு வேலிகள்
கிராம பகுதிகளுக்கு வரும் மான்களை நாய்கள் கடிப்பதால் இறந்து விடுகிறது. எனவே இப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையிலும், விவசாய நிலங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையிலும் இப்பகுதியில் உள்ள வனப்பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்தால் நன்றாக இருக்கும். எனவே, வனத்துறை அதிகாரிகள் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.