பழனி இடும்பன்குளத்தில் தடுப்புக்கம்பி சேதம்
பழனி இடும்பன்குளத்தில் தடுப்புக்கம்பி சேதமடைந்தது.
பழனி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன் கோவில் மற்றும் இடும்பன்குளம் உள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இடும்பன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பாதயாத்திரை வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இடும்பன்குளத்தில் புனித நீராடி இடும்பனை வழிபட்ட பின்பே பழனி கோவிலுக்கு செல்கின்றனர்.
பழனி இடும்பன்குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக படித்துறை உள்ளது. இந்நிலையில் குளத்தில் ஆழமாக பகுதிக்கு பக்தர்கள் ஆபத்தான முறையில் குளித்து வந்தனர். எனவே குளத்தின் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. மேலும் கம்பியை தாண்டி செல்லக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இடும்பன்குளத்தில் அமைக்கப்பட்ட தடுப்புக்கம்பி சேதம் அடைந்து காணப்படுகிறது. எனவே குளத்தில் புனிதநீராட வரும் வெளியூர் பக்தர்கள் ஆபத்தான முறையில் தடுப்புக்கம்பியை கடந்து சென்று குளிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இடும்பன்குளத்தில் அமைக்கப்பட்ட தடுப்புக்கம்பியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.