காட்டு யானைகளால் விளை நிலங்கள் பாதிப்பு:வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனியில் வனத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்.காட்சிக்கண்ணன் தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று வந்தனர். வனத்துறை அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தேவாரம் பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து விளை பயிர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். அதில், 'தேவாரம் பகுதியில் முகாமிட்டுள்ள 3 யானைகள் தொடர்ச்சியாக விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. கோம்பை ரங்கநாதர் கோவில் முதல் ராசிங்காபுரம் வரை விளை நிலங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
சோதனை சாவடி
எனவே இந்த யானைகளை மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவுக்கு அனுப்பி தீர்வு எட்டுவதற்கு அரசு முன்வர வேண்டும். சாக்குலூத்து மெட்டுச்சாலையின் உண்மைத்தன்மையை கண்டறிந்து சாலை அமைக்க வனத்துறையினர் தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
முந்தல் அடகுபாறை பகுதியில் வன விலங்கு வேட்டையை தடுக்க வேண்டும். கம்பம்மெட்டு, குமுளி, முந்தல் ஆகிய இடங்களில் வனத்துறை சோதனை சாவடிகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.