300 ஏக்கரில் பயிரிட்ட பட்டர்பீன்ஸ் கொடிகள் சேதம்

சிறுமலை பகுதியில் தொடர் மழையால் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு இருந்த பட்டர்பீன்ஸ் கொடிகள் அழுகி சேதமாகின.

Update: 2022-12-17 16:26 GMT

சிறுமலையில் காய்கறிகள்

தமிழகத்தில் பூக்கள், காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். திண்டுக்கல்லில் இருந்து காய்கறிகள், பூக்கள் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காய்கறிகளை பொறுத்தவரை மலைப்பகுதிகளான கொடைக்கானல், தாண்டிக் குடி, சிறுமலை பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகின்றன.

இதில் சிறுமலையை பொறுத்தவரை வாழை, பலா, எலுமிச்சை, மிளகு, காபி, சவ்சவ், அவரை, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இவற்றில் பட்டர்பீன்ஸ் 3 பருவத்திலும் விளைச்சல் தரக்கூடியது ஆகும். இதனால் பட்டர்பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பட்டர் பீன்ஸ் கொடிகள்

சிறுமலையில் பொன்னுருக்கி, அகஸ்தியர்புரம், தாழக்கடை உள்பட பல பகுதிகளில் பட்டர் பீன்ஸ் அதிகமாக பயிரிடப்படுவது வழக்கம். அதன்படி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பட்டர்பீன்ஸ் பயிரிடப்பட்டு இருந்தன. இதற்காக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை விவசாயிகள் செலவு செய்தனர். அதற்கேற்ப பட்டர்பீன்ஸ் விளைச்சல் நன்றாக இருந்தது.

ஒருகிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை ஆனதால், விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பட்டர்பீன்ஸ் கொடிகளில் இருந்து பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்தன. இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி உதிர்ந்து விழுந்த வண்ணம் இருக்கிறது. அதோடு பட்டர்பீன்ஸ் கொடிகளும் அழுகி வருகின்றன.இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்