அமராவதி அணையில் இருந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண்ணீர் திறப்பு
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
விவசாயிகள் கோரிக்கை
உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அமராவதி அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாசனப் பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற சிறப்பு நனைப்புக்கும், குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டது.
அமைச்சர் திறந்துவைத்தார்
பயிர்களை காப்பாற்றும் வகையிலும், குடிநீர் தேவைக்காகவும் 1503.36 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் பயிர்களை காப்பாற்றும் வகையிலும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவைத்தார். கால்வாய் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர். வருகிற 27-ந் தேதி வரையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மொத்தம் 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (பயிற்சி) கிர்திகா, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட அவைத்தலைவர், ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.