உடுமலை அருகே நீர்வரத்து இல்லாததால் அணைகள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
கூட்டுக்குடிநீர் திட்டம்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி. தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்வரத்து இன்றி...
அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது.
அணைகளுக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு வருகிறது. ஆங்காங்கே மண் திட்டுக்களாக தோற்றம் அளித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.
விவசாயிகள் கவலை
கோடை காலத்தை பயன்படுத்தி அணைகளை தூர்வார கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி விட்டனர். இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் அணையில் உபரி நீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதிகாரிகள் செய்யும் தவறுகளால் மழை நீர் வீணாகி சாகுபடிகளுக்கு இடையூறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
அணைகள் நிலவரம்
நேற்று காலை 6 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 25.03 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அதே போன்று நேற்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 66.34 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 137 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.