பருவமழை பொய்த்ததால்வாணியாறு அணை வறண்டது 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

Update: 2023-10-07 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பருவமழை பொய்த்ததால் வாணியாறு அணை வறண்டது. இதனால் 10 ஆயிரத்து 517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

வாணியாறு அணை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலை ஏற்காடு அடிவாரத்தில் 65 அடி கொள்ளளவு கொண்ட வாணியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, தேவராஜபாளையம், மெனசி, பூதநத்தம் தென்கரைக்கோட்டை, அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 17 கிராமங்களில் 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

அணையில் தண்ணீர் அதிகளவில் இருக்கும்போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இந்த நிலையில் தற்போது பருவமழை பொய்த்ததால் அணையில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு இன்றி அணை வறண்டு காணப்படுகிறது.

விவசாயம் பாதிப்பு

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 39 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் மூலம் விவசாயம் செய்ய காத்து கொண்டிருந்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பாக்கு, மஞ்சள், கரும்பு, நெல், சாகுபடி செய்து வந்தனர்.

தற்போது மழை இல்லாததாலும், அணையில் தண்ணீர் குறைந்துவிட்ட காரணத்தினாலும் பயிர்கள் சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்