தலித் விடுதலை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி

கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

Update: 2023-04-13 17:35 GMT

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கம் மகளிர் அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு மாநில மகளிர் அணி செயலாளர் நதியா தலைமையிலான நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட முன்றனர். பின்னர் அவர்களிடம் நகராட்சி ஆணையாளர் முருகேசன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள், பணம் வசூலிக்கப்படாது என்று டெண்டர் ரத்து செய்யப்பட்ட நகராட்சி 15 நவீன கழிப்பிடங்களில் முறைகேடாக பணம் வசூலிப்பது, திருவண்ணாமலையில் உள்ள எரிவாயு தகன மேடையில் அதிக பணம் வசூலிப்பது, பஸ் நிலைய வளாகத்தில் சிறு வியாபாரிகளிடம் கட்டாய வசூலிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதனையடுத்து அவர்கள் கோரிக்கை மனுவை ஆணையாளரிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை ரத்து செய்துவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, மாநில இளைஞரணி செயலாளர் என்.ஏ. கிச்சா, மாவட்ட தலைவி சின்னத்தாய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் இரா.நாகராஜன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மு.க.ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்