தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மறை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பணிக்குழு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமை தாங்கினார். பங்கு தந்தையர்கள் மரியதாஸ், அருளானந்து உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மறைவட்ட தலைவர் ஜோசப் வரவேற்று பேசினார். முன்னாள் மறை வட்ட தலைவர் தலித்தாஸ், நெல்சன், வினோத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தலித் கிறிஸ்தவர், இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950, பத்தி 3-ஐ உடனே நீக்கம் செய்ய வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். இதில் மறை வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.