தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

Update: 2022-07-05 18:17 GMT


பழுதான சிறுமின்விசை பம்பு 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அனந்தலை கிராமம், குளத்தூர் 2-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு அருகில் சிறுமின்விசை பம்புடன்கூடிய குடிநீர்தொட்டி உள்ளது. இதில் இருந்துதான் அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது சிறுமின்விசை பம்ப் பழுதாகி விட்டதால் அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பழுதான சிறுமின்விசை பம்பை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.

-மணி, அனந்தலை.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோட்டின் குறுக்கே மின்கம்பிகள் செல்கிறது. இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இந்த வழியாக பள்ளி பஸ்கள் சென்று வருகின்றன. சிலநேரங்களில் பஸ்கள் மீது மின் கம்பிகள் உரசக்கூடிய நிலை உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பஸ் டிரைவர்கள் அச்சத்துடனேயே பஸ்களை இயக்கி வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-ஜெயசீலன், கண்ணமங்கலம்.

வீணாகும் குடிநீர் 

வேலூர் மாநகராட்சி, சின்ன அல்லாபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பலநாட்களாக குடிநீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தெருவில் ஓடுகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நவீன்குமார், சின்னஅல்லாபுரம்.

கால்வாயை சீரமைக்க வேண்டும் 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல், தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது. இது பஸ் நிறுத்தம் பகுதி என்பதால் பஸ் ஏறுவதற்காக வரும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே கால்வாயை தூர்வாரி, சீரமைக்க வேண்டும்.

-சலீம்பாஷா, ஆலங்காயம்.

அரசு பஸ் இயக்கப்படுமா?

வேலூரில் இருந்து ஆற்காடு, ராணிப்பேட்டை, ஓச்சேரி, நெமிலி வழியாக தக்கோலம் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. அதே வழித்தடத்தில் தக்கோலத்தை அடுத்துள்ள பேரம்பாக்கம் மற்றும் கடம்பத்தூர் வழியாக வேலூர்- திருவள்ளூர் இடையே காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு பஸ் இயக்கினால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-அப்துல்ரகீம், ராணிப்பேட்டை.

உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் 

காட்பாடி பாரதிநகர் 2-வது மெயின்ரோடும், 3-வது குறுக்கு தெருவும் இணையும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது. இந்த பாலம் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. மேலும் இதன் வழியாக செல்பவர்கள் கீழேவிழுந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே உடைந்த சிறிய பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க முன்வரவேண்டும்.

-லோகநாதன், பாரதிநகர்.

தினத்தந்திக்கு நன்றி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியாக தற்போது காவேரிப்பாக்கத்தில் ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றிதெரிவித்துள்ளனர்.

-ராசேந்திரன், காவேரிப்பாக்கம்.

Tags:    

மேலும் செய்திகள்