தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.

Update: 2022-06-02 18:49 GMT


குடிநீர் குழாய் உடைப்பு

வேலூர் அருகே சேண்பாக்கத்தில் இருந்து கொணவட்டம் செல்லும் வழியில் மின்வாரிய அலுவலகம் அருகே நீண்டகாலமாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நீலமேகம், கொணவட்டம்.

இலவச நவீன சுகாதார வளாகம் கட்டப்படுமா?

வாலாஜா பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கழிப்பிடம் செல்ல இலவச நவீன சுகாதார வளாகம் இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் நிரந்தரமாக இலவச நவீன சுகாதார வளாகம் கட்டித் தரப்படுமா? என பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

-அய்யப்பன், வாலாஜா.

சிமெண்டு சாலை போட வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கல்குப்பம் மதுராஅரிமாநகர் கிராமத்தில் இடுகாட்டு சாலை 600 மீட்டர் மண் சாலையாக உள்ளது. மழை பெய்யும்போது சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. அதில் மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர். எனவே, அந்தச் சாலையை தரம் உயர்த்தி சிமெண்டு சாலையாக போட வேண்டும்.

-ராஜா, போளூர்.

வாரச்சந்தையில் 'குடி'மகன்கள் அட்டகாசம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது. வாரச்சந்தை கடைகளில் இரவில் வரும் மதுபிரியர்கள் மதுபானத்தை குடித்து அங்கேயே காலிப் பாட்டில்களை போட்டு உடைக்கின்றனர். வாரச்சந்தையில் இரவில் தகாத செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் தண்டிக்க வேண்டும்.

-பாண்டியன், சோளிங்கர்.

 பயன்பாட்டுக்கு வராத கழிவறை

வேலூர் பழைய மீன்மார்க்கெட் பகுதியில் பழ வியாபாரிகளுக்கு திறந்த வெளி மேடை கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், கழிவறைகளும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கழிவறைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-மணிவண்ணன், வேலூர்.

கால்வாய் வசதி தேவை

பேரணாம்பட்டு ஜே.ேஜ.நகர் 2-வது வார்டு பகுதியில் கால்வாயில் கழிவுநீர் ஓடாததால் நடுதெருவிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதுபற்றி பல முறை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தருவார்களா?

-சுகவேஸ்வரன், பேரணாம்பட்டு.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலைய பகுதியில் எம்.ஜி.ஆர்.சிலை எதிரே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கழிவுநீர் ஓட வழியில்லாமல் சாலையில் ஆறாக வழிந்தோடுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-க.விஜயகாந்த், ஆரணி.

 பூங்காவை சீரமைப்பு செய்ய வேண்டும்

திருவண்ணாமலை நகராட்சி தாமரை நகரில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா உள்ளது. அந்தப் பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது. திருவண்ணாமலையில் கோவில் தவிர பொழுதுப்போக்கு அம்சங்கள் குறைவாக உள்ளது. ஆகையால் தாமரை நகர் பூங்காவை சீரமைப்பு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-குமார், திருவண்ணாமலை.

 சுடுகாடு அடிபம்பு சீரமைக்கப்படுமா?

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் சுடுகாடு உள்ளது. அங்கு ஈமக்காரியங்களை மேற்கொள்ள அடிபம்பு வசதி உள்ளது. ஆனால் அதில் தண்ணீர் வருவது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் உள்ள அடிபம்பை சீரமைத்துத் தர வேண்டும்.

-மு.இளங்கோவன், ஆலப்பாக்கம்.

சாலையை விரிவுப்படுத்த வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சியில் திருப்பத்தூர், ஜமுனாமரத்தூர் செல்லும் மார்க்கெட் ரோடு குறுகியதாக உள்ளது. அந்தச் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்தச் சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்பது பல ஆண்டு கால கோரிக்ைகயாக உள்ளது. ஆனால் அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படுமா?

-கே.ஜெயபால், ஆலங்காயம்.

பாலாற்றில் காலிப்பாட்டில்கள் குவியல்

வேலூர் மாவட்டம் காவனூர் பாலாற்றில் தண்ணீர் ஏற்றும் நிலையத்துக்கு அருகில் குளுகோஸ் பாட்டில்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. அந்தப் பாட்டில்கள் ஏற்கனவே காலாவதியாகி ஆகியும், வெப்பத்தால் சூடேறி வெடித்தும் நிலத்துக்கு சென்று குடிநீரில் கலந்து நஞ்சாகி பல கிராம மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கிடக்கிறது. அந்தப் பாட்டில்களை பாலாற்றில் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், குடியாத்தம்.

Tags:    

மேலும் செய்திகள்