தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 9962818888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கடும் துர்நாற்றம்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் கோவைக்கும் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் இரவு நேரங்களில் சிலர் ஆங்காங்கே சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அதிகாலையில் கோவைக்கு செல்ல வரும் பயணிகள் கடும் துர்நாற்றத்தால் அவதி அடைகின்றனர். இந்த பிரச்சினைக்கு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து உடனடியாக உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாகரன், பொள்ளாச்சி.
குண்டும், குழியுமான சாலை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிசோலை சோலாடாமட்டம் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சென்று வர முடியாத நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், மாணவ-மாணவிகள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். அந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.
மல்லன், சோலாடா மட்டம், குன்னூர்.
சுகாதார சீர்கேடு
கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டி.இ.எல்.சி. மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் அந்த இடத்தில் வசிப்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்வோர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சிைனக்கு பேரூராட்சி நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும்.
மோட்டார் மணி, கிணத்துக்கடவு.
தெருநாய்கள் தொல்லை
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள செட்டியக்காபாளையம், தேவணாம்பாளையம், கப்பளாங்கரை, குளத்துப்பாளையம், பனப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்வதால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அச்சப்படுகிறார்கள். மேலும் அவர்களை தெருநாய்கள் கடிக்கும் அபாயமும் நிலவுகிறது. இது தவிர இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியும் வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வி, நெகமம்.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. ஏற்கனவே அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது கழிவுநீர் வழிந்தோடுவதால், சாலை மேலும் மோசமாகி வருகிறது. இது தவிர அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்வதோடு, சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
காளிரஞ்சித், கோவை.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் ஈஸ்வரன் கோவில் தெரு பகுதியில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு, குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளையும், கட்டிட கழிவுகளையும் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், மீனாட்சி தோட்டம், பெரியநாயக்கன்பாளையம்.
பொதுமக்கள் அவதி
கோவை சிங்காநல்லூர் உப்பிலியார் தெரு வீரமதி அம்மன் கோவில் பின்புறம் உப்பு நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி கடந்த சில மாதங்களாக பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், உப்பு நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அதற்காக நீண்ட தூரம் சென்று வரும் நிலை உள்ளது. எனவே அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதை களைந்து, அந்த தொட்டியில் இருந்து உப்பு நீர் வினியோகிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
மருதாச்சலம், சிங்காநல்லூர்.
புதர் செடிகள் வெட்டப்படுமா?
கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு அருகே பந்து வெளியே செல்லாமல் தடுக்கும் வகையில் சுமார் 20 அடி உயரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பு தடுப்பு வேலி பழுதடைந்து சரிந்து விழுந்துள்ளதுடன், அங்கு புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காட்டுப்பன்றிகள் மற்றும் தெருநாய்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் நலன் கருதி தடுப்பு வேலியை புதுப்பிக்கவும், புதர் செடிகளை வெட்டி அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, கோத்தகிரி.