'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
திண்டுக்கல் ஓய்.எம்.ஆர்.பட்டி குமரக்கோனார் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், திண்டுக்கல்.
தெருநாய்கள் தொல்லை
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தெருக்களில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் பின்தொடர்ந்து சென்று துரத்துவதால் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அகற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபிநாத், மேலச்சொக்கநாதபுரம்.
தெருவிளக்கு வசதி வேண்டும்
திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து ஊராட்சி மொட்டணம்பட்டியில் தெருவிளக்கு வசதி இல்லை. மேலும் குடிதண்ணீர் குழாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், மொட்டணம்பட்டி.
சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
பழனியை அடுத்த சிவகிரிபட்டி ஊராட்சி 2-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. வரப்பு போன்று தோண்டப்பட்ட இடத்தில் கழிவுநீர் செல்கிறது. மேலும் தார்சாலையும் இல்லை. இதனால் மழைக்காலத்தில் தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் அமைப்பதுடன் தார்சாலை வசதியும் செய்து தர வேண்டும்.
-பொதுமக்கள், சிவகிரிபட்டி.
ஆக்கிரமிப்பின் பிடியில் நிழற்குடை
சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அப்பிப்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிஜி, அப்பிப்பட்டி.
புதர்மண்டிய கட்டிடம்
பெரியகுளத்தை அடுத்த கைலாசப்பட்டி பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணி, பெரியகுளம்.
சேதமடைந்த சாலை
கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தரணிதரன், கம்பம்.
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள கிரிவீதிகளில் பக்தர்களின் தாகம் தணிக்க குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவை தற்போது காட்சி பொருளாக மட்டுமே இருக்கின்றன. அதில் குடிநீர் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் மக்கள் கிரிவீதிகளை வலம் வரும்போது குடிநீர் இல்லாமல் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டிகளில் முறையாக தண்ணீர் நிரப்ப வேண்டும்.
-கணேசன், பழனி.
மருத்துவமனை முன்பு குவியும் குப்பை
பழனி அரசு மருத்துவமனை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் மருத்துவமனை முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவற்றில் கிடக்கும் உணவு பொருட்களை சாப்பிட மாடுகள், நாய்கள் அப்பகுதிக்கு வருகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோயாளிகளும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, பழனி.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
----------------