'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-09-30 17:35 GMT

மின்கம்பம் மாற்றப்படுமா?

பழனி ஆர்.எப்.சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று, கனமழையின் போது மின்கம்பம் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே அந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்குமார், பழனி.


குவிந்து கிடக்கும் குப்பைகள்

கடமலைக்குண்டு கிராமத்தில் பிள்ளையார்கோவில் அருகே டிரான்ஸ்பார்மர் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, அங்கு குப்பைகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கடமலைக்குண்டு.


மலைப்பாதையில் அபாய மரம்

ஆத்தூர் தாலுகா சித்தரேவில் இருந்து தாண்டிக்குடி செல்லும் மலைப்பாதையில் 'எஸ்' வளைவு முடியும் இடத்தில் பழமையான மரம் உள்ளது. அது கரையான் அரித்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அபாய மரத்தை அகற்ற வேண்டும்.

-பிரபாகரன், சித்தரேவு.

முறையான பஸ் வசதி

வத்தலக்குண்டுவில் இருந்து கெங்குவார்பட்டிக்கு முன்பு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக பஸ்கள் முறையாக வருவதில்லை. அதேபோல் பெரியகுளம் செல்லும் பஸ்களும் சரியாக வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும்.

-பொதுமக்கள், கெங்குவார்பட்டி.

சாலையின் நடுவே பள்ளம்

வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் பச்சப்பட்டி சாலையின் நடுவே பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தை மூட வேண்டும்.

-பாக்கியராஜ், வத்தலக்குண்டு.


மாணவர்களுக்காக கூடுதல் பஸ்

திண்டுக்கல்லில் இருக்கும் பள்ளிகளில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் மாலையில் மாணவ-மாணவிகள் திரும்ப செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டும், தொங்கி கொண்டும் செல்லும் நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.


-கண்ணன், திண்டுக்கல்.


சேதமடைந்த கட்டிடம்

கம்பம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருேக பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-கார்த்திக், கம்பம்.


கனரக வாகனங்களுக்கு தடை

ஆத்தூர் தாலுகா அழகர்நாயக்கன்பட்டியில் இருந்து சித்தையன்கோட்டை அரசு பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. ஆனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் திரும்பி வரும் நிலை உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.


-பொதுமக்கள், அழகர்நாயக்கன்பட்டி.


பாலம் கட்டும் பணி மந்தம்

தேனி கே.ஆர்.ஆர்.நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சிறிய பாலம் கட்டும் பணி நடப்பதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன. இந்த பணி மிகவும் மந்தமாக நடப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.


-கண்ணகி, தேனி.


போக்குவரத்து நெரிசல்

கம்பத்தில் காமயகவுண்டன்பட்டி சாலையோரம் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், கம்பம்.


------


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Tags:    

மேலும் செய்திகள்