'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-09-29 16:10 GMT

சாலையில் தேங்கும் கழிவுநீர்

பழனி பைபாஸ் ரோட்டில் மேம்பாலம் அருகே கால்வாய் வசதி முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தியாகு, திண்டுக்கல்.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

ஆயக்குடியில் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருக்களில் குவியும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், ஆயக்குடி.


சேதமடைந்த மின்கம்பம்

கம்பம் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இரும்பால் ஆன அந்த மின்கம்பத்தின் அடியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துவிட்டன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயன், கம்பம்.

தரைப்பாலம் சேதம் 

பழனி சிவகிரிப்பட்டியில் வீட்டுவசதி வாரியம் சார்பில், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையின் குறுக்காக கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறுவதற்காக வைக்கப்பட்ட சிமெண்டு குழாய் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் வாகன ஓட்டிகளால் செல்ல முடியவில்லை. எனவே தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.

-முனியாண்டி, பழனி.

சாலையோரத்தில் குவியும் குப்பை

ஒட்டன்சத்திரம் 10-வது வார்டில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அள்ளிச்செல்லவும் முறையாக ஆட்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-பிரவீன், ஒட்டன்சத்திரம்.


பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை

சின்னமனூரை அடுத்த அப்பிப்பட்டி விஸ்வநாதபுரம் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிப்பறை தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ரவி, அப்பிப்பட்டி.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணிக்கின்றனர். ஆனால் காலை, மாலை நேரங்களில் குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பஸ்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.


வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

கண்டமனூர் அருகே ராமச்சந்திராபுரத்தில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை முறையாக தூர்வார வேண்டும்.

-பொதுமக்கள், ராமச்சந்திராபுரம்.


கிடப்பில் போடப்பட்ட மயான பணி

போடி ரெங்கநாதபுரம் 7-வது வார்டில் மயான சுற்றுச்சுவர், எரிவாயு தகன மேடை ஆகியவை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் அதன் பிறகு அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் மயான வசதி இன்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மயான பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிராம மக்கள், ரெங்கநாதபுரம்.


வாகனங்களால் விபத்து அபாயம்

கம்பம் புது பஸ் நிலையத்திற்குள் அடிக்கடி ஆட்டோ, ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் வாகனங்கள் வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கம்பம்.

------------------


உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Tags:    

மேலும் செய்திகள்