'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் கால அட்டவணை இடம் மாறுமா?
நெல்லை புதிய பஸ் நிலையத்தில், அரசு விரைவு பஸ் முன்பதிவு மையத்தின் அருகில் பஸ் கால அட்டவணை இல்லாததோடு, முன்பதிவு படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வசதியும் செய்யப்படாமல் உள்ளது. பஸ் கால அட்டவணையை பார்க்க வேண்டுமானால், சுமார் 10 கடைகளை கடந்து சென்று பார்த்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி, முன்பதிவு மையத்தின் அருகில் பஸ் கால அட்டவணை வைப்பதுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வசதியும் ஏற்படுத்திதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- சங்கரபாண்டியன், பெருமாள்புரம்.
ஆஸ்பத்திரி கட்டிடத்தில் வளரும் அரசமரம்
முக்கூடலில் பழைய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேல் பெரிய அரசமரம் ஒன்று வளர்ந்துள்ளது. மேலும், அந்த கட்டிடம் மிகவும் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. முன்பு இந்த கட்டிடம் பிரசவ வார்டாக செயல்பட்டு வந்தது. மற்ற அறைகள் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் மற்றும் அனைத்து சிகிச்சைகளும் நடைபெற்று வருவதால் பழைய கட்டிடம் கவனிப்பாரற்று கிடக்கிறது. எனவே, இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், முக்கூடல்.
வேகத்தடைகள் அகற்றப்படுமா?
ஏர்வாடி முதல்நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் வேகத்தடைகள் அதிகமாக உள்ளன. இதனால் அவசர ஊர்திகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கு தடையாக உள்ளது. ஆகையால் தேவைக்கு அதிகமாக உள்ள வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- காஜா நஜிமுதீன், ஏர்வாடி.
ஆபத்தான மின்கம்பம்
நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் கனரக வாகனம் மோதியதில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக அந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- மாரிமுத்து, பெருமாள்நகர்.
ரெயிலில் தூய்மை பராமரிக்கப்படுமா?
செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரெயில் 8.40 மணிக்கு நெல்லைக்கு வருகிறது. அந்த ரெயிலில் வரும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள் ரெயிலில் அமர்ந்தே உணவருந்தி விட்டு, இருக்கையை சுத்தம் செய்யாமல் சென்று விடுகிறார்கள். இதனால் அந்த ரெயில் மீண்டும் 9.10 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும்போது, அதில் ஏறும் பயணிகள் இருக்கையில் கிடக்கும் எச்சில் உணவை பார்த்து முகம் சுளிக்கின்றனர். இதில் அதிகாரிகள் தலையிட்டு தூய்மையை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
- ராமசுப்பிரமணியன், கூனியூர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் கடற்கரையில் இருந்து குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வரை தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பகுதியில் முன்பு தண்ணீர் தேங்கியதால், சாலையை உடைத்து தண்ணீரை கடலுக்குள் திருப்பி விட்டனர். இதனால் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது தசரா திருவிழாவுக்கு பக்தர்கள் வருவார்கள் என்பதால், அந்த சாலையை சீரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ராேஜஷ், குலசேகரன்பட்டினம்.
போக்குவரத்துக்கு இடையூறு
கோவில்பட்டி வள்ளுவர் நகர் 2-வது தெருவில் சாலையோரம் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், ஓடக்கரை, புறையூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் வழியாக நாசரேத்துக்கு அரசு பஸ் (எண்- 62 எஸ்) இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால், சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் அந்த பஸ்ைச மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- முருகேசன், ஓடக்கரை.
குடிநீர் தேவை
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு சங்கிவிளை பகுதியில் திருச்செந்தூர்-பரமன்குறிச்சி சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன. அதை சரிசெய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- முருகானந்தம், சங்கிவிளை.
பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?
நெல்லையில் இருந்து கருங்குளத்துக்கு அதிகமான டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. கருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தான் தாதன்குளம் உள்ளது. இந்த ஊர்களுக்கு இடையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. மேலும் தாதன்குளத்தில் ரெயில் நிலையம் உள்ளது. இதனால் கருங்குளம் பஸ்சை தாதன்குளம் வரை நீட்டித்தால், அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களும், நெல்லை, திருச்செந்தூருக்கு ரெயில் மூலம் செல்பவர்களும் பயன் அடைவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ஜோஸ்வா, தாதன்குளம்.
புகாருக்கு உடனடி தீர்வு
தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சி 14-வது வார்டு குடியிருப்பு பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடப்பதாக, மேலகரத்தை சேர்ந்த முருகன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு நேற்று செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.
சுகாதாரக்கேடு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் 5-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் அரசு மாணவர்கள் விடுதி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே உள்ள வாறுகால் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே, வாறுகாைல தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- திருக்குமரன், கடையம்.
புகார் பெட்டி செய்தி எதிரொலி
சங்கரன்கோவில் தாலுகா கீழநீலிதநல்லூரில் தரைதள நீர்த்தேக்க தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதாக கீழநீலிதநல்லூரை சேர்ந்த சுப்பிரமணியன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.
பாலம் சீரமைக்கப்படுமா?
சங்கரன்கோவில் தாலுகா குலசேகரமங்கலம் கிராமத்தில் மெயின் ரோடு விரிவாக்கத்தின்போது, அங்கிருந்து ஒரு தெருவிற்குள் செல்லும் பாலம் சேதம் அடைந்தது. ஆனால், அதன்பிறகு அது சரிசெய்யப்படவில்லை. ஆகையால், ெமயின் ரோட்டுக்கும், தெருவிற்கும் இணைப்பு பகுதியாக உள்ள பாலத்தை சீரமைத்து தருமாறு ேகட்டுக் கொள்கிறேன்.
- கனி குமார், குலசேகரமங்கலம்.
வேதத்தடை தேவை
தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, அம்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் தென்காசி பழைய பஸ் நிலையத்தின் உள்ேள சென்று வருகின்றன. அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பஸ்கள் மிகவும் வேகமாக வரும்போது, தெற்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கிழக்கில் இருந்து வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு வேகத்தடை அமைத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
- அருண்குமார், சிவநாடானூர்.