'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-08-21 17:11 GMT

அகற்றப்படாத குடிநீர் தொட்டி

வேடசந்தூர் அருகே உள்ள கூவக்காபட்டி ஆதிதிராவிடர் காலனியில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, கடந்த ஆண்டு தனியார் பஸ் மோதியதில் இடிந்து விழுந்தது. இதையடுத்து அதன் அருகிலேயே சிறிய அளவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இடிந்து விழுந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இதுவரை அகற்றப்படவில்லை. இரவில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் இந்த தொட்டி மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இடிந்து விழுந்த தொட்டியை உடனே அகற்ற வேண்டும்.

-பொதுமக்கள், வேடசந்தூர்.

மின்கம்பத்தால் பக்தர்கள் அவதி

சாணார்பட்டி ஒன்றியம் கவராயப்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகே மின்கம்பம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. மழை, பலத்த காற்றுவீசும் சமயத்தில் மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் அறுந்துவிழும் அபாயம் உள்ளது. மேலும் கோவிலுக்கு மிக அருகில் மின்கம்பம் இருப்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களும் அவதிப்படுகின்றனர். எனவே மின் கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

-முத்தன், கவராயப்பட்டி.

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

திண்டுக்கல் இ.பி.காலனி சக்திநகர் 2-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரத்தினம், திண்டுக்கல்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்.

-வினோத், திண்டுக்கல்.

சாக்கடை கால்வாய் அமைக்காததால் அவதி

கம்பம் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் ஏற்கனவே இருந்த சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டு புதிதாக கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கால்வாயை ஒட்டியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். பலகையை தற்காலிகமாக கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் குறுக்காக போட்டு பயன்படுத்தி வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

-அபுதாகிர், கம்பம்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

ஜெயமங்கலம் காந்திநகர் காலனி 9-வது வார்டில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சவுந்தரபாண்டி, ஜெயமங்கலம்.

சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

பெரியகுளம் எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழத்தொடங்கியுள்ளன. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூரிய பிரகாஷ், புதுக்கோட்டை.

மின்மோட்டார் பழுது

கூடலூர் பென்னிகுயிக் நகரில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே மின்மோட்டாரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கூடலூர்.

------------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்