'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-10 16:50 GMT

குப்பைகளால் துர்நாற்றம்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ராஜிவ்நகரில் சாலையோரத்தில் தென்னை மட்டைகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகரன், ராஜீவ்நகர்.

எரியாத தெருவிளக்குகள்

வேடசந்தூர் சீத்தமரம் நால்ரோடு பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதன் காரணமாக இரவில் அப்பகுதி வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

-வெங்கிடுசுப்பு, சீத்தமரம் நால்ரோடு.

அதிகரிக்கும் பாலித்தீன் பைகள் பயன்பாடு

திண்டுக்கல்லில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகள், பலகார கடைகள் என அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

செயல்படாத சுகாதார வளாகம் 

நிலக்கோட்டையை அடுத்த எத்திலோடு ஊராட்சி முத்தலாபுரம் கிழக்கு தெருவில் உள்ள பெண்களுக்கான சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளது. இதனால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. மேலும் சுகாதார வளாகம் முன்பு குப்பைகளையும் கொட்டி எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், எத்திலோடு.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

நிலக்கோட்டையை அடுத்த குல்லலக்குண்டு கல்லடிப்பட்டியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தெருவாசிகள், கல்லடிப்பட்டி.

இரவில் பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

பெரியகுளத்தை அடுத்த வடகரை புதிய பஸ் நிலையத்துக்குள் இரவு நேரத்தில் பஸ்கள் வருவதில்லை. பஸ் நிலையத்துக்குள் வராமல் பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் தொலைவில் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்படுகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஷ்ணுவர்தன், பெரியகுளம்.

குண்டும், குழியுமான சாலை

சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் இருந்து வேப்பம்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன், சின்னமனூர்.

டிரான்ஸ்பார்மர் தூண்கள் சேதம் 

கடமலைக்குண்டுவை அடுத்த வருசநாடு பசுமலைத்தேரி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்து வருகிறது. தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தூண்கள் உடைந்து டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

-முத்துசரவணன், வருசநாடு.

சாலை வசதி வேண்டும்

உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனி, இந்திரா நகர், அப்துல்கலாம்நகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதி முறையாக செய்யப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலை வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அகமது மீரான், உத்தமபாளையம்.

கூடுதல் தெருவிளக்குகள் தேவை

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சாலை, கம்பம் சாலை உள்ளிட்ட சாலைகளில் தெருவிளக்குகள் போதுமான அளவு அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலைகளில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே கூடுதல் தெருவிளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்காதர் ஜெய்லானி, உத்தமபாளையம்.------------------உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------

Tags:    

மேலும் செய்திகள்