'தினத்தந்தி' புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-30 16:35 GMT

குடிநீர் மீண்டும் வருமா?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா அரியகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரியகுளம், தளவாய்புரம், பொயிலான்நகர் ஆகிய பகுதிகளுக்கு திருமலைகொழுந்துபுரம் தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய் மூலமாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் ஏற்றி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

- சண்முகசுந்தரமணி, அரியகுளம்.

சேதமடைந்த பாலங்கள்

நெல்லையை அடுத்த மேலநத்தம் காமராஜர் நகர் முதல் வெள்ளக்கோவில் வழியாக வண்ணார்பேட்டை பைபாஸ் வரை உள்ள சாலையில் ஆங்காங்கே பாலங்கள் உள்ளன. இந்த பாலங்கள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. அதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- பிரவீன் பெரியசாமி, மணப்படைவீடு.

குண்டும், குழியுமான சாலை

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு பெருமாள்நகர், சின்னமூலைக்கரைப்பட்டி வழியாக கருங்குளம் செல்லும் சாைல குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

- மாரிமுத்து, பெருமாள்நகர்.

குளத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

களக்காடு பத்மனேரி பெரியகுளத்தின் முகப்பு பகுதியிலும், குளத்துக்குள்ளும் ஏராளமான சீமைக்கருவேல மரங்களும், வேலிக்காத்தான் செடிகளும் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இதனால் குளத்தில் போதிய அளவில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. அந்த குளத்தில் செடி, மரங்களை அகற்றி தூர்வாரினால் விவசாயிகள் பெரிதும் பயன் அடைவர்.

- கணேசன், பத்மனேரி.

குப்பை வேறு இடத்தில் கொட்டப்படுமா?

நெல்லை மாநகராட்சி 46-வது வார்டு மேலநத்தம் ஆனையப்ப சாஸ்தா ேகாவில் செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்த குப்பைகள் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் சென்று சேருவதால் அங்கு சுகாதாக்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க வேறு இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

- முத்துவேல், மேலநத்தம்.

சேதமடைந்த பாலம்

ெதன்காசி மாவட்டம் கடையநல்லூர் டாக்டர் அம்பேத்கர் தெருவில் இருந்து தினசரி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் செல்லும் வழியில் பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதன் நடுவில் பள்ளம் ஒன்றும் உள்ளது. அந்த வழியாக சிறுவர்கள், முதியவர்கள் என்று தினமும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். அவர்கள் நலன் கருதி, சேதமடைந்த அந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகேசன், கடையநல்லூர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் கீழஆம்பூர், கருத்தப்பிள்ளையூர், பங்களாகுடியிருப்பு, சிவசைலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தென்காசிக்கு செல்ல வேண்டுமானால், கடையம் சென்று தான் செல்ல வேண்டும். தினமும் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு அங்கு சென்று வர வேண்டி உள்ளது. எனவே இந்த கிராமங்களை உள்ளடக்கி, கடையத்துக்கு சென்றுவர கூடுதலாக 2 பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

உடைந்து கிடக்கும் வாறுகால்

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வணிக வைசிய கீழத்தெரு மாடசாமி கோவில் அருகில் உள்ள வாறுகால் வெகு நாட்களாக உடைந்து காணப்படுகிறது. அதில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் வாறுகால் சுவர் இடிந்து விழுந்து உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாததாக உள்ளது. ஆகையால் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அதனை சரிசெய்ய வேண்டும்.

- குமார், கீழப்பாவூர்.

தெருவிளக்கு வசதி தேவை

கடையநல்லூர் நகராட்சி 33-வது வார்டு இக்பால் நகர் ஆலிம்ஷா தெருவுக்கு பின்புறம் உள்ள புதிய குடியிருப்பு பகுதியான ஹமீதியா நகரில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. இங்குள்ள தெருக்களில் மின்விளக்கு அமைக்காததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த நேரங்களில் மக்கள் ெவளியே சென்றுவர சிரமமாக உள்ளது. எனவே தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- முகம்மது யாகூப், கடையநல்லூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூரில் இருந்து மருதடியூர், சாலையடியூர் வழியாக நெல்லை-தென்காசி சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் குண்டும்-குழியுமான அந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

- முருகன், ஆவுடையானூர். 

Tags:    

மேலும் செய்திகள்