'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-05 15:17 GMT

சுகாதார நிலையம் திறக்கப்படுமா? 

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கொடைரோட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. எனினும் இதுவரை துணை சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே துணை சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும். -ரதீஷ் பாண்டியன், பொம்மனம்பட்டி.

சேதமடைந்த மின்கம்பம்

சின்னாளப்பட்டியை அடுத்த காந்திகிராமம் ஏ.டி.எஸ்.நகரில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து விட்டது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுவதால், எலும்புகூடாக காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் நடமாடும் நிலை உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற வேண்டும். -ஜெரால்டு, வக்கம்பட்டி.

தார்சாலை அமைக்க வேண்டும் 

தேனி கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கருவேல்நாயக்கன்பட்டி சாலை சேதம் அடைந்துவிட்டது. சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து கிடப்பதால், இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். -கதிரவன், தேனி.

பஸ் வசதி தேவை

பழனியை அடுத்த சின்ன கலையம்புத்தூர் அருகே உள்ள வி.கே.மில்ஸ் பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பழனி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பஸ் இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பஸ்கள் நின்று செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாமோதரன், பழனி.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 

தேனி கொண்டுராஜா மேல்நிலைப்பள்ளி அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி அடைப்பை சரிசெய்ய வேண்டும். -செல்வக்குமார், தேனி.

Tags:    

மேலும் செய்திகள்