தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 08888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு பெயர் பலகை திருட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கொண்டைபாளையத்தில் ஒவ்வொரு தெருக்களிலும் தெருவின் பெயரை பலகையில் எழுதி வைத்துள்ளனர். அதில் சாவடித்தெருவில் வைத்திருந்த பெயர் பலகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டனர். நகராட்சி நிர்வாகம் மற்றொரு பலகையில் வைத்து அந்த தெருவின் பெயரை எழுதி வைப்பார்களா?
-புண்ணியமூர்த்தி, சோளிங்கர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திண்டிவனம் சாலையில் நல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் இளங்காடு கிராமத்துக்கு குடிநீர் குழாய் செல்கிறது. வந்தவாசி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே அந்த குடிநீர் குழாயில் உள்ள வால்வில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறிக் கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-வையாபுரி, வந்தவாசி.
பொதுக்கிணறு இடிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கட்டளை கிராமத்தில் பொதுக் குடிநீர் கிணறு உள்ளது. அங்கு, கோவில் கட்டப்போவதாகக் கூறி ஒரு பிரிவினர் கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பொதுக் கிணற்றை சீரமைப்பு செய்து மறுபடியும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா?
-கோவிந்தன், கட்டளை.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
ஆற்காடு தாலுகா மாங்காடு பஞ்சாயத்து லப்பைபேட்டை-பழையமாங்காடு ஒரு கிலோ மீட்டர் தூரத்திலான சாலையில் தார் ஜல்லியை அகற்றாமல் வேஸ்ட் சிப்ஸ் கொட்டி நிரப்பி கொண்டிருக்கின்றனர். இதனால் நாளடைவில் தார் சாலை ெபயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விடும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
-பி.ராம்குமார், மாங்காடு.
மேம்பாலம் வரை நீண்டு வளர்ந்துள்ள மரங்கள்
வேலூர் கஸ்பா மேம்பாலத்தின் இருபுறமும் மரம், செடிகள் வளர்ந்து மேம்பாலம் வரை நீண்டுள்ளது. அந்த வழியாக ஓரமாக செல்லும்போது, கண்களில் பட்டு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மேம்பாலம் வரை நீண்டு வளர்ந்துள்ள மரங்களின் கிளைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
-விஜய், கஸ்பா வேலூர்.
மருத்துவமனை 24 மணிநேரமும் ெசயல்படுமா?
கண்ணமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இரவில் அவசர, முதலுதவி சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். 24 மணி நேரமும் டாக்டர், நர்சுகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
-சத்தியசீலன், கண்ணமங்கலம்.
சாலையை சீர் செய்வார்களா?
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தியம்மன் கோவில், நீர்த்தேக்கத்துக்கு பலர் வந்து செல்கிறார்கள். அங்கு, செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை பெய்தால் பள்ளமான பகுதியில் நீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம், பாப்பாத்தியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் பள்ளமான பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முரம்பு மண் கொட்டி சரி செய்ய வேண்டும்.
-மதன், ஆண்டியப்பனூர்.