'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-06-28 15:57 GMT

பஸ்நிலைய இருக்கைகள் சேதம் 

சின்னமனூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போடப்பட்டுள்ள இருக்கைகளில் சில சேதம் அடைந்து விட்டன. மேலும் இருக்கைகள் உள்ள பகுதியில் முழுவதும் குப்பைகள் கிடப்பதோடு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இருக்கைகள் இருந்தும் அதில் பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த இருக்கைகளை சரிசெய்து, பஸ்நிலையத்தை தூய்மையாக வைக்க வேண்டும். -மாயவன், தேனி.

சாலையை விட உயரமான பாலம்

திண்டுக்கல்-நத்தம் சாலையில் கன்னியாபுரத்தில் சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் சாலையை விட உயரமாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே பாலத்தின் உயரம் அளவுக்கு சாலையை சரிசெய்ய வேண்டும். -மணி, கன்னியாபுரம்.

லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வாகனங்கள் சத்திரம் சாலை வழியாக தான் செல்ல வேண்டியது இருக்கிறது. அதேபோல் மார்க்கெட், கடைவீதிகளுக்கு செல்வோரும் அந்த வழியாக செல்கின்றனர். ஆனால் சத்திரம் சாலையில் லாரிகள் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். -தனசேகர், திண்டுக்கல்.

சாலையில் அபாய பள்ளம்

திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானா அருகே சாலையில் பெரியபள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே சாலையில் உள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க வேண்டும். -ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

மேலும் செய்திகள்