தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகாா் பெட்டிக்கு 9176108888 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-

Update: 2022-06-09 18:52 GMT

வழிகாட்டி பெயர் பலகையை முறையாக வைப்பார்களா?



திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு தாலுகா அலுவலகம் எதிரே நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த அரசினர் தோட்ட பகுதி பெயர் பலகை ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டு வெறுமனே காட்சி அளிக்கிறது. இதில் சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வருபவர்கள் நகராட்சி, பத்திரப்பதிவு துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, நூலகம், பூங்கா, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் வழிகாட்டி பெயர் பலகையை முறையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபுராஜேந்திரகுமார், திருப்பத்தூர்.

பயணிகள் நிழற்குடை தேவை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்களத்தூர்-அரசங்குப்பம் கூட்ரோட்டில் ஏற்கனவே இருந்த பயணிகள் நிழற்குடை பழுதாகி விட்டது. இதனால், அதை இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள். தற்போது வெயில், மழைக்காலத்தில் பஸ்சுக்காக கால்கடுக்க நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட இடத்தில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.

-சு.சிவக்குமார், கீழ்களத்தூர்.

நச்சுப்புகையால் மூச்சுத்திணறல்




கே.வி.குப்பத்தை அடுத்த காவனூர் பாலாற்றங்கரையில் மக்கும், மக்காத குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். அதில் இருந்து ெவளிேயறும் நச்சுப்புகையால் மக்களுக்கு சுவாச பிரச்சினை, மூச்சுத் திணறல் உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. குப்பைகளுக்கு தீ வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலாற்றங்கரையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க ேவண்டும்.

-முரளி, காவனூர்.

சிதிலமடைந்த நிழற்கூடம்

வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. அருகில் சிலர் மாடுகளை கட்டி வைத்துள்ளதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. நிழற்கூடத்தை மறைக்கும்படி டிஜிட்டல் பேனர்களை வைத்து விடுகின்றனர். நிழற்கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேல், காகிதப்பட்டறை.

பழுதான சாலை



திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சொரத்தூர் கூட்ரோடு மற்றும் இ.பி. அலுவலகம் அருகே இரு இடங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. அந்தப் பகுதியில் சாலை சேதமடைந்துள்ளது. சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சரியாக சீரமைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே பழுதான சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.

-வெ.பழனி, சொரத்தூர்.

ஒலிபெருக்கியால் பயணிகள் அவதி

செங்கம் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கடைகள் முன்பு வியாபாரிகள் ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்கிறார்கள். இதனால் பயணிகள் தங்களின் செல்போனில் ேபச முடியாமல் அவதிப்படுகிறார்கள். ரோந்துப்பணியில் ஈடுபடும் போலீசார் கடை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிப்பதைத் தடுக்க வேண்டும்.

-சிவச்சந்திரன், செங்கம்.

மாட்டுத்தொழுவமாக மாறிய கிராம சேவை மைய கட்டிடம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சின்னகல்லப்பாடி கிராமம். அங்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டுப் பணிகள் முடிவடையவில்லை. மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் கால்நடை கட்டும் மாட்டுத் தொழுவமாக மாற்றி விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அங்கு மாடுகளை கட்டுவதை தடுக்க வேண்டும்.

-பாலசுப்பிரமணியம், சின்னகல்லப்பாடி.

Tags:    

மேலும் செய்திகள்