தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-06-25 19:12 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை பள்ளியின் எதிரே அமைந்துள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாயின் மதகுகள் துருப்பிடித்து சேதடைந்த நிலையில் இருப்பதாக ஆறுமுகநயினார் என்பவர் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மதகுகள் அமைக்கப்பட்டன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மின்மோட்டார் பழுது

களக்காடு யூனியன் கீழ காடுவெட்டி, அப்பர்குளம், சிங்கிகுளம், நடுவக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி நிரப்ப முடியாததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மின்மோட்டார் பழுதை உடனே சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.

-கருப்பசாமி, அப்பர்குளம்.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

மூலைக்கரைப்பட்டி- முனைஞ்சிப்பட்டி இடையே சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-உமாசங்கர், முனைஞ்சிப்பட்டி.

குடிநீர் தொட்டி அமைப்பது எப்போது?

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் மேல தெருவில் புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக கான்கிரீட் மேடை கட்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் குடிநீர் தொட்டியை அமைக்காமல் பணிகளை கிடப்பில் போட்டு உள்ளனர். எனவே குடிநீர் தொட்டி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

நெல்லையை அடுத்த பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி அருகில் உள்ள அப்துல் லத்தீப் நகர், செந்தமிழ் நகர், அண்ணாமலை நகர், சாதலி நகர் பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்காக, ஜல்லிக்கற்களை சாலையில் பரப்பினர். ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் சாலை பணியை நிறைவு செய்யாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ரஹமத்துல்லா, பேட்டை.

மாசடைந்த குடிநீர்

தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மாசடைந்து கலங்கிய நிலையில் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ராமச்சந்திரன், தெற்கு வீரவநல்லூர்.

சுகாதாரக்கேடு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மைய கட்டிடத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அங்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளை வெளியில் ஓடையில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-முத்து விநாயகம், கோவில்பட்டி.

கடற்கரை தூய்மைப்படுத்தப்படுமா?

குலசேகரன்பட்டினம் கோவில் கடற்கரையில் குப்பைக்கூளமாக உள்ளது. அங்கு சூரசம்ஹார விழாவையொட்டி வேடம் அணிந்து வந்த பக்தர்களின் ஆடை, அணிகலன்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இரவில் கடற்கரையில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். எனவே கடற்கரையை தூய்மையாக பராமரிக்க வேண்டுகிறேன்.

-காளி, குலசேகரன்பட்டினம்.

சாலை, வாறுகால் வசதி தேவை

தூத்துக்குடி மாநகராட்சி 14-வது வாா்டு சின்னகண்ணுபுரம் பத்திரகாளிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள தெரு மற்றும் செல்வவிநாயகர் கோவில் தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு வாறுகால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-காளிதுரை, தூத்துக்குடி.

ஒளிராத மின்விளக்குகள்

உடன்குடி யூனியன் செம்மறிக்குளம் பஞ்சாயத்து கல்விளை அம்பேத்கர் நகரில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். எனவே தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவநாதன், கல்விளை.

* ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 5-வது வார்டு முன்னீர்காலனியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் வெளியில் செல்ல பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் எரிவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஆனந்த், ஸ்ரீவைகுண்டம்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ெதன்காசி- அம்பை மெயின் ரோட்டில் திரவியநகர் விலக்கில் இருந்து திருமலையப்பபுரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டுகிறேன்.

-கண்ணண், கேளையாபிள்ளையூர்.

* கடையம் அருகே முதலியார்பட்டி காந்திநகர் பகுதியில் சாலையோரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-திருக்குமரன், கடையம்.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

மேலஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூருக்கு அம்பையில் இருந்து இரவு 8.50 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் (தடம் எண்:- 22 எப்) கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

போக்குவரத்துக்கு இடையூறு

ஆலங்குளம் புதிய பஸ் நிலையம் அருகில் தென்காசி- நெல்லை மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோர மின்கம்பங்கள் மற்றும் சாலையோரத்தில் பதிக்கப்பட்ட தொலைபேசி ஒயர்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலையோரம் உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன. சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாததாலும், மரக்கிளைகளை அகற்றாததாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டுகிறேன்.

-வெட்டும்பெருமாள், ஆலங்குளம்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

சங்கரன்கோவில் தாலுகா மாங்குடி ஊராட்சி செவல்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியானது 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இ்ன்னும் திறக்கப்படவில்லை. மேலும் அங்கு சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. பல நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-உமாசங்கர், செவல்பட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்