'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-09 18:45 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் இடத்தில் வாகன காப்பகம் முன்பாக சர்வீஸ் ரோட்டில் கழிவுநீர் வாறுகால் திறந்த நிலையில் இருப்பதாக வாகசர் முருகன் என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக தற்போது வாறுகால் மூடப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

உயரமான வேகத்தடையால் அவதி

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் யூனியன் அலுவலகம் அருகே உள்ள ெரயில்வே கிராசிங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ெரயில்வே பணிகள் நடைபெற்றது. அப்போது அதில் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அந்த வேகத்தடைகள் மிகவும் உயரமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலமோன், பரப்பாடி.

தடுப்புகள் இடம் மாற்றப்படுமா?

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு மணிக்கூண்டு பஸ்நிறுத்தத்தில் மாநகராட்சி சார்பில் பயணிகள் நிழற்கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதன் முன்பாக காவல்துறை சார்பில் தடுப்புகள் (பேரிகார்டுகள்) வைக்கப்பட்டு உள்ளதால் மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே அதனை சிறிது தூரம் இடம் மாற்றி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஐசக் பாண்டியன், கிருபாநகர்.

வர்ணம் பூசப்படாத வேகத்தடை

நெல்லை மேலப்பாளையம் மண்டலம் 54-வது வார்டு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள், மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. ஆனால் அதில் அமைக்கப்பட்ட வேகத்தடையின் மேல் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. குறிப்பாக என்.ஜி.ஓ. காலனி வனத்துறை அலுவலகம் முன்பு போடப்பட்ட வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அந்தோணிராஜ், திருமால்நகர்.

குடிநீர் குழாயில் உடைப்பு

ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை- ஊரல்வாய்மொழி மெயின் ரோட்டில் தபால் நிலையம் எதிர்ப்புறம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகுவதோடு, அதனுடன் கழிவுநீரும் கலப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கதுரை, பணகுடி.

பழுதடைந்த அடிபம்பு

பாளையங்கோட்டை சித்தா ஆஸ்பத்திரி ரோடு லங்கர்கானா தெருவில் அடிபம்பு ஒன்று நீண்ட நாட்களாக பழுதடைந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, பாளையங்கோட்டை.

வழிகாட்டி பலகை வேண்டும்

வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் கிராமத்தில் புகழ்பெற்ற ஆதிமூல பெருமாள் கோவில் உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள். ஆனால் போதுமான இடங்களில் வழிகாட்டி பலகை இல்லாததால் கோவிலுக்கு வழிதெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். எனவே வழிகாட்டி பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சரவணன், அத்தாளநல்லூர்.

பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம். மையம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையம் வாரத்தில் பாதி நாட்கள் பூட்டியே கிடப்பதால் பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.

ராஜேஷ், குலசேகரன்பட்டினம்.

மின்விளக்கு வசதி தேவை

காயல்பட்டினம் நகராட்சி தைக்காபுரம் முதல் வெள்ளை சாமி கோவில் வரை பனைமர தோப்புகள் அமைந்த சாலையில் மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சண்முகவேல், காயல்பட்டினம்.

குண்டும் குழியுமான சாலை

திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் இருந்து வெயிலுகந்தம்மன் கோவில் தெரு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் மட்டுமல்லாமல் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

குடும்ப அட்டைதாரர்கள் அவதி

உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் உள்ள ரேஷன் கடை சரிவர திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் அவதிப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையை சரியாக திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், உடன்குடி.

திறக்கப்படாத சுகாதார வளாகம்

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் யூனியன் பட்டாடைகட்டி பஞ்சாயத்து தர்மத்தூரணி கிராமத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே இதனை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், பட்டாடைகட்டி.

* செங்கோட்டை தாலுகா அலுவலகம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள பொது சுகாதார வளாகம் கடந்த சில வாரங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மீ்ண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம்

செங்கோட்டை தாலுகா இலத்தூர் கிராமம் காந்தி காலனி 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்ரா டேனியல், இலத்தூர்.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து இந்திராநகர் மெயின் ரோட்டில் உள்ள வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் வாறுகால் அடைப்பை நீக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பாக்கியராஜ், இந்திராநகர்.

இரும்பு கம்பம் அகற்றப்படுமா?

தெற்கு கடையம் பஞ்சாயத்து தெற்கு கடையம் தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். இரும்பு கம்பம் பல மாதங்களாக ஒரு வீட்டு சுவரின் மீது சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் விபரீதம் நிகழ்வதற்கு முன்பாக அந்த இரும்பு கம்பத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்குமரன், கடையம்.

Tags:    

மேலும் செய்திகள்