தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-05 19:03 GMT

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு, செடிமலை முருகன் கோவில் தெருவில் அதிக அளவில் தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடைகளை கடித்து விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்க்கி, தெற்குமலை.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வண்ணாடு கிராமத்தில் தோணூர்-கிணத்தூர் செல்லும் சாலை ஓரமாக மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் மேல்பகுதி உடைந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆனந்த். துறையூர்.

இருள் சூழ்ந்து காணப்படும் சுகாதார நிலையம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் மின்விளக்குகள் எதுவும் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் மின்கம்பம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், உப்பிலியபுரம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து குண்டு பர்மா காலனி ஓ.எப்.டி. வரை சுமார் 1 கிலோ மீட்டர் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவெறும்பூர்.

மது விற்பனையை தடுக்க நடவடிக்கை தேவை

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூரில் பகல் மற்றும் இரவுநேரங்களில் அதிகளவில் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பகலில் வேலைக்கு செல்பவர்கள் குடித்து விட்டு சுற்றி வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தி மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாபுத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்