தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-28 18:38 GMT

சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குளத்துப்பாளையத்தில் விவசாயிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன் வேட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தில் வேட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சுற்றுச்சுவர்இல்லாமல் முற்கம்பி வேலி மட்டும் போடப்பட்டுள்ளது. இது இந்த வங்கிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குளத்துப்பாளையம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் தடுமாறி செல்கின்றனர். இரவில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புன்னம்சத்திரம்.

ஆற்று பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம். நொய்யல் குறுக்குச் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குறுக்குச்சாலை.

வாய்க்கல் தேங்கியுள்ள செடி,கொடிகள்

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம் ,சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை ,தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக என். புதூர் வரை புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. வாய்க்காலில் ஆங்காங்கே செடி, கொடிகள் தண்ணீரில் மிதந்து செல்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மரவாபாளையம்.

வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச கோரிக்கை

கரூர் பசுபதிபாளையத்திலிருந்து வடக்கு காந்திகிராமம் செல்லும் சாலையில் தினந்தோறும் இரவு, பகல் என எல்லா நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ராமானூரில் உள்ள தனியார் திரையரங்கம் அருகே ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த வேகத்தடை இருப்பது இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை அருகே வரும் வரை தெரிவதில்லை. இதனால் வேகத்தை குறைக்காமல் அப்படியே வேகத்தடை மீது வாகனத்தை செலுத்தும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைகின்றனர். மேலும் கர்ப்பிணிகள்,வயது முதிர்ந்தோர், நோயாளிகள் ஆகியோரை பின்னால் அமர வைத்து இருசக்கர வாகனத்தில் வரும் போது வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கும்போது பின் இருக்கையில் இருந்து நழுவி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த வேகத்தடையை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் அல்லது வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூசி அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ராமானூர்.

Tags:    

மேலும் செய்திகள்