தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் வீசப்படும் மதுபாட்டில்களால் அவதி
அரியலூர் வண்ணான் குட்டை அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றன. இதனால் மது பிரியர்கள் அங்கு மது வாங்கி கொண்டு வந்து சாலையில் வைத்து மது அருந்துகின்றனர். மேலும் அந்த பாட்டில்களை சாலையில் உடைத்து விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படுமா ?
அரியலூர் மாவட்டம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் இருந்து தினமும் பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் அரியலூர் ,திருச்சி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இங்கு பெரும்பாலான இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக பயணிகள் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடியே நிற்கின்றனர். சில சமயங்களில் மருத்துவமனை செல்லும் வயதான நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே பயணியர் நிழற்குடைகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி.
கழிவுநீர் செல்ல வடிகால் வேண்டும்
அரியலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து நடுநிலை பள்ளி வரை சாலையின் இருபுறங்களில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அங்குள்ள கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வெற்றியூர்.
மருதையாற்றின் கரைகளை உயர்த்த கோரிக்கை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மருதையாறு சந்திக்கும் இடத்தில் தண்ணீர் வெளியேறி விளை நிலங்களை சேதப்படுத்தி விடுகிறது. எனவே இரண்டு ஆறுகளும் சந்திக்கும் இடத்தில் உள்ள மருதையாற்று கரைகளை உயர்த்தி, பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், முத்துவாஞ்சேரி.
குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் உஞ்சினி அம்பேத்கர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பதால் கலங்கலாக குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், உஞ்சினி கிராமம்.