தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், மகாதானபுரம் பிரிவு சாலையில் இருந்து பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மகாதானபுரம்.
சேறும், சதியுமான மண் சாலை
கரூர் மாவட்டம், புங்கோடையில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே முடியாததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புங்கோடை.
அதிக பாரம் ஏற்றி செல்லும் டிராக்டர்கள்
கரூர் மாவட்டம் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம் ,குந்தாணி பாளையம் ,சேமங்கி,ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், முத்தனூர், கவுண்டன்புதூர் மற்றும் சிவகிரி, முத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு டிராக்டரில் இரண்டு டிப்பர்களை இணைத்துக் கொண்டு கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு டிராக்டர் டிரைவர்கள் ஓட்டி வருகின்றனர் . இதனால் பின்னால் வரும் டிப்பர் தெரியாமல் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் முன்னாள் செல்லும் வாகனங்கள் மீது அதிக பாரம் இருப்பதால் பிரேக் பிடிக்காமல் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் இரு சக்கர வாகனங்கள் மீதும், நடந்து செல்பவர்கள் மீதும் டிராக்டர் டிப்பர் மோதி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நொய்யல்.
சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள்
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கரூர்- சேலம் சர்வீஸ் சாலையில் வாத்துக்கறியுடன் டிபன் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது .கடைக்கு சாப்பிட வருபவர்கள் அவர்களது கார்களையும், லாரிகளையும் சர்வீஸ் சாலை ஓரத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விட்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாக வருகின்றனர். சர்வீஸ் சாலை மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் சாலை ஓரத்தில் ஏராளமான வாகனம் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தவிட்டுப்பாளையம்.
விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கிணறு
கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் இருந்து தோட்டக்குறிச்சி செல்லும் மெயின் சாலையோரத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை சுற்றி எந்த தடுப்புச்சுவரும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கிணறு அந்த இடத்திற்கு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் கட்டி, அப்பகுதியில் விளம்பர பதாகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அய்யம்பாளையம்.