தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-02 18:15 GMT

வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அலுவலகம் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமயம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆலங்குளத்தில் இருந்து மதயானைப்பட்டி வரை சுமார் 4 கிலோ மீட்டர் அளவிற்கு உள்ள தார் சாலையானது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே திருச்சியில் இருந்து இலுப்பூருக்கு சென்று வரும் அரசு பஸ் சரியாக வருவதில்லை. இதனால் திருச்சிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மதயானைப்பட்டி.

பழுதடைந்த பள்ளி கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் முன் பகுதியில் பயன்பாடு அற்ற பழுதடைந்த பள்ளி கட்டிடம் நீண்ட காலமாக அகற்றப்படாமல் உள்ளது. பள்ளி மாணவர்கள் அந்த கட்டிடத்தின் அருகே சென்று வருவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான அந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வெட்டன்விடுதி.

குரங்குகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், மலைக்குடிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக குரங்குகள் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து காய்கறிகள் மற்றும் உணவு, திண்பண்டங்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும் வயல் வெளிகளில் புகுந்து கடலை, நெல் போன்ற பயிர் வகைகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும் தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்து வீணாக்கி வருகிறது. மேலும் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் தினமும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கருப்பையா, மலைக்குடிப்பட்டி.

பழுதடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையில் நல்லமுத்தான் ஊரணி குளக்கரையில் சோத்துப்பாளை செல்லும் சாலை அருகே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதையடுத்து பழுந்தடைந்த மின்கம்பத்தை அகற்றாமல் மின்வாரிய அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை அதன் அருகிலேயே வைத்தனர். ஆனால் பழைய மின்கபத்தில் இருந்தே மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றி, புதிய மின்கம்பத்தில் இருந்து மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.

தேங்கி நிற்கும் மழைநீர்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதிகளில் உள்ள ஊரக சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சேறும், சகதியுமாகவும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

Tags:    

மேலும் செய்திகள்