தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் மெகா பள்ளம்
அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள பள்ளியின் நுழைவாயில் தென்புறப் பகுதியின் சாலையில் மெகா பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி எப்போதும் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இரவு நேரங்களில் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடைவீதியில் காத்து கிடக்கின்றனர். இதனால் கடைவீதி பகுதியில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சரவணன், மீன்சுருட்டி.
நாய்கள் தொல்லை
அரியலூர் மாவட்டம், கா.அம்பாபூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும்மக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
பஸ் வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், கா.அம்பாவூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிகளில் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பஸ் வசதிகள் இல்லாததால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு நடந்து மற்றும் லிப்ட் கேட்டு வருவதால் சரியா நேரத்திற்கு வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், சம்பவந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் அரியலூரில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு மணலேரி, கல்லங்குறிச்சி, கோப்பிலியான் குடிகாடு, மண்ணுழி, தேளூர், குடிசால், காத்தான்குடி வழியாக கா. அம்பாபூருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், காவனூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அரியலூர் மாவட்டம், வெற்றியூர் ஊராட்சி, திருப்பெயர் கிராமத்தில் ரேஷன் கடை அருகே கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் செல்ல முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருப்பெயர்.