'சிலாப்' அமைக்கப்பட்டது
நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி.காலனியில் இருந்து செட்டிகுளத்துக்கு செல்லும் சாலையின் திருப்பத்தில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் சிலாப்புகள் அமைக்கப்படாமல் காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி ஓடையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடா்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடையில் சிலாப்பு அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
பஸ் இயக்க வேண்டும்
நாகர்கோவிலில் இருந்து குளச்சலுக்கு தடம் எண் 5டி-5பி என்ற பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வசதிக்காக எள்ளுவிளை, சட்டுவன்தோப்பு, முடங்கனூர், மேல ஆடராவிளை, வைராகுடியிருப்பு வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக மேற்குறிப்பிட்ட பகுதி வழியாக பஸ் இயக்கப்படாமல் நேர் வழியாக இயக்கப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகளின் நலன்கருதி பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெபசிங், வைராகுடியிருப்பு.
சுகாதார சீர்கேடு
தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியில் திருவிதாங்கோடு நீட்சி கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் சிலர் அடிக்கடி இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தண்ணீர் மாசுபட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், பனவிளை.
நாய்கள் தொல்லை
பாலபள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பனையில் அந்தோணியார் தெரு உள்ளது. இந்த தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் ஒருவித அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேனியல், குறும்பனை.
எரியாத தெரு விளக்குகள்
நாகர்கோவில் மாநாகராட்சிக்குட்பட்ட வைத்தியநாதபுரம் வீரசிவாஜி தெரு, விவேகானந்தர் தெரு, ஆற்றங்கரை மெயின் ரோடு பகுதிகளில் பல தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த பகுதி பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் போது மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத விளக்குகளை மாற்றிவிட்டு, புதிய விளக்குகள் பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.வி.நாராயணன், வைத்தியநாதபுரம்.
வீணாகும் குடிநீர்
ஆரல்வாய்மொழி வடக்கூர் கல்பாளையத்தெரு உள்ளது. இந்த தெருவில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி கழிவுநீர் ஓடையில் பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சரிசெய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவுதம் கிருஷ்ணன், ஆரல்வாய்மொழி.