'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து முடவன்குளம் வழியாக கைலாசபேரிக்கு தடம் எண்-573 அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் சமீப காலமாக ஊருக்குள் வராததால் மாணவர்கள், வியாபாரிகள் சிரமப்படுவதாக கைலாசபேரியை சேர்ந்த வாசகர் இசக்கிதாசன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக ஊருக்குள் பஸ் வந்து செல்கிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சிதிலமடைந்த பெயர் பலகை
திசையன்விளை பேரூராட்சி செல்வ மருதூர் பெரிய அம்மன் கோவில் தெரு-2 என்று வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுத்துகள் முழுவதுமாக அழிந்து உள்ளது. இதனால் புதிதாக வரும் மக்கள், அது எந்த தெரு என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே தெரு பெயர் பலகையை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரண்டு தெப்பக்குளங்கள் உள்ளன. இதில் பக்தர்களும், ஏராளமான பொதுமக்களும் குளித்து வருகிறார்கள். தற்போது இக்குளங்களில் உள்ள தடுப்புச்சுவர் உடைந்து விழுந்து விட்டது. இதனால் வெளியே உள்ள கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன், சிறுவர்-சிறுமிகளும் அதில் விழும் நிலை உள்ளது. எனவே புதிதாக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வராஜ், வள்ளியூர்.
குண்டும், குழியுமான சாலை
திசையன்விளை தாலுகா தோப்புவிளை உறுமன்குளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரவின்குமார், பார்க்கநேரி.
* நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி சத்யாநகர் முதல் தெருவில் கடந்த பல வருடங்களாக சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. ஆகவே சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
அகில், சத்யாநகர்.
அடர்ந்து வளர்ந்த முள்செடிகள்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் முள்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே முள்செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராேஜஷ், குலசேகரன்பட்டினம்.
வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?
உடன்குடி மெயின் பஜார் சந்திப்பில் இருந்து தாண்டவன்காடு செல்லும் சாலையை விரிவுப்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த சாலையில் கொட்டங்காடு அருகே புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேகத்தடையில் இன்னும் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இதை கவனிக்காமல் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே வேகத்தடை மீது வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சரவணகுமார், கொட்டங்காடு.
பேவர்பிளாக் கற்கள் அகற்றம்
திருச்செந்தூர் கோவில் தெருவில் பேவர்பிளாக் கற்கள் அகற்றப்பட்டு பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. எதற்காக அகற்றப்பட்டு உள்ளது என தெரியவில்லை. தற்போது அந்த சாலை, சரள் கற்களாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே சரிந்து அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே பக்கவாட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்களை பதித்து சாலையை சமப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
ரோடு மோசம்
தென்திருப்பேரையில் இருந்து குரங்கணி செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
தமிழரசன், தென்திருப்பேரை.
ஆபத்தான மின்மோட்டார் அறை
கயத்தாறு நகரப்பஞ்சாயத்து அரசன்குளம் கிராமத்தில் மின்மோட்டார் அறைக்கு மேல் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் மின்மோட்டார் அறை சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அதனை அகற்றிவிட்டு புதிதாக மின்மோட்டார் அறை கட்டிக் கொடுப்பதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
பூலையா, அரசன்குளம்.
தேங்கி கிடக்கும் கழிவுநீர்
பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள அருகில் வீடுகளின் இருந்து வரும் கழிவு நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மந்திரமூர்த்தி, பாவூர்சத்திரம்.
நடைபாதையில் இடையூறு
கடையநல்லூர் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள பாப்பான் கால்வாயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது தொலைபேசி கேபிள்கள், பாலத்தின் நடைபாதையில் போடப்பட்டது. இன்று வரை அகற்றப்படவில்லை. இதனால் நடைபாதைக்கு இடையூறாக உள்ளது. அதற்கு பதிலாக பாலத்திற்கு மேல்புறம் பெரிய இரும்புக்குழாயில் கேபிளை அமைக்கலாம். ஆகவே நடைபாதைக்கு இடையூறாக உள்ள கேபிள்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கந்தசாமி, கடையநல்லூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
வாசுதேவநல்லூர் யூனியன் இனாம்கோவில்பட்டியில் இருந்து வடுகப்பட்டி செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதேபோல் இனாம்கோவில்பட்டி- சொக்கநாதன்புத்தூர் தார்சாலையும் மோசமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடப்பதால், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த அச்சத்துடனேயே செல்ல நேரிடுகிறது. எனவே சாலைகளை அகலப்படுத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாலமுருகன், இனாம்கோவில்பட்டி.
பஸ்நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்
சிவகிரி பஸ்நிலையத்திற்குள் இரவு 9 மணிக்கு மேல் காலை 7 மணி வரை அரசு பஸ்கள் எதுவுமே வருவதில்லை. இவற்றால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே பஸ்நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
ஈஸ்வரன், சிவகிரி.
சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்
பனவடலிசத்திரம் அருகே சாயமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆராய்ச்சிபட்டி கிராமத்திற்கு, அச்சம்பட்டி பஞ்சாயத்து மடத்துப்பட்டி ஊரில் இருந்து மின்சார வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மின்சார வழித்தடத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. அதனால் மின்சாரக் கம்பி அறுந்து தரையில் கிடக்கிறது. ஆனால் இதுவரை சரிசெய்யப்படாததால், அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், பனவடலிசத்திரம்.