'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-11 17:10 GMT

தண்ணீர் தொட்டி சேதம் 

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கொடைரோடு மடைகருப்பணசாமி கோவில் அருகே தண்ணீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே தண்ணீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

அடிப்படை வசதி தேவை

அம்பாத்துறை ஊராட்சி பெருமாள்கோவில்பட்டியில் குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், பெருமாள்கோவில்பட்டி.

நிறைவடையாத சாக்கடை கால்வாய் பணி 

திண்டுக்கல் பேகம்பூர் பிஸ்மிநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. ஆனால் முழுமையாக கட்டப்படவில்லை. சில இடங்களில் முறையாக சிமெண்டு பூச்சு செய்யப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தெருவாசிகள், திண்டுக்கல்.

எரியாத தெருவிளக்குகள்

திண்டுக்கல் சந்தைப்பேட்டை மாநகராட்சி பள்ளி அருகே தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அந்த வழியாக பெண்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

-ஜெயச்சந்திரன் திண்டுக்கல்.

புகையால் வாகன ஓட்டிகள் அவதி 

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே சாலையோரத்தில் குப்பைகள் அடிக்கடி தீவைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கரும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. கரும்புகை சாலையை மறைப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தன், திண்டுக்கல்.

குவிந்து கிடக்கும் குப்பை 

சின்னமனூர் நகராட்சி பெருமாள் கோவில் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, அப்பிப்பட்டி.

தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பகுதியில் சாலையோரத்தில் குப்பைகளுடன் ஒர்க்‌ஷாப் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. பின்னர் அவற்றை மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்படுவதுடன், ஒருவித துர்நாற்றமும் வீசுகிறது. எனவே குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், பழனிசெட்டிபட்டி.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையில் இருந்து தேனி செல்லும் பிரதான சாலையோரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கான மின் இணைப்பு கம்பிகள் சாலையின் குறுக்காக தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின் இணைப்பு கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், மயிலாடும்பாறை.

பராமரிப்பு இல்லாத ஏ.டி.எம். மையங்கள்

தேனியில் உள்ள சில வங்கிகளுக்கான ஏ.டி.எம். மையங்கள் பராமரிப்பு இன்றி விடப்பட்டதால், ஏ.டி.எம். மைய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த மையங்களுக்கு சென்று பணம் எடுக்க தயங்குகின்றனர். எனவே ஏ.டி.எம். மையங்களை சீரமைக்க வேண்டும்.

-ஆரோன், தேனி.

பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு

உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வேண்டும்.

-முருகன், உத்தமபாளையம்.-

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------------

Tags:    

மேலும் செய்திகள்