'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
கன்னியாகுமரி- தூத்துக்குடி கடலோர சாலையில் ராதாபுரம் தாலுகா உலகரட்சகர்புரம் ரோடு இணையும் இடத்தில், ரோட்டுக்கு வடபுறம் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகுவதாக ஆவுடையாள்புரத்தை சேர்ந்த வாசகர் ரவிச்சந்திரன், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குளத்தின் மடையை சீரமைக்க வேண்டும்
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி தேவனார்குளம் மூலம் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு இறையடிக்கால் வழியாக தண்ணீர் வருகிறது. அந்த குளத்தில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட 2 மடைகள் உள்ளன. அந்த மடைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், அவை பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, அந்த 2 மடைகளையும் சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமகிருஷ்ணன், ஏர்வாடி.
குண்டும் குழியுமான சாலை
நெல்லை மாநகராட்சி 1-வது வார்டு சிதம்பரநகரில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னதாக தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
சூரியநாராயணன், சிதம்பரநகர்.
வீணாகும் குடிநீர்
நெல்லை மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட சீனிவாசநகர் 3-வது தெருவில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா?
செல்வம், சீனிவாசநகர்.
ரோட்டின் குறுக்கே பள்ளம்
நெல்லை கொக்கிரகுளத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே மேலப்பாளையம் செல்லும் மெயின் ரோட்டின் குறுக்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வசந்த், கொக்கிரகுளம்.
தெருவிளக்கு எரியவில்லை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள எட்டயபுரம் ரோட்டில் இருந்து அரசு கால்நடை மருத்துவமனை வரை மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பாலமுருகன், கோவில்பட்டி.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
ஏரல் தாலுகா குறிப்பன்குளம் பஞ்சாயத்து குறிப்பன்குளம் காலனி பஸ்நிறுத்தம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன், குறிப்பன்குளம்.
பள்ளம் மூடப்படுமா?
சாத்தான்குளம் அமிர்தகிரிநகர் அலங்காரபுரம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலையில், குடிநீர் குழாய் பணிக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பின்னர் பணிகள் முடிந்து இன்று வரை பள்ளம் மூடப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?
பாலகுமார், சாத்தான்குளம்.
கூடுதல் மருத்துவர்கள் தேவை
உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதலாக மருத்துவர்களை நியமித்து இரவு, பகலாக ஆஸ்பத்திரி செயல்பட வேண்டும். மேலும் அங்குள்ள சுகப்பிரசவம் அறை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராஜன், உடன்குடி.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
திருச்செந்தூர் சண்முகபுரத்துக்கு அடுத்ததாக அமைந்துள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ராணிமகாராஜபுரம், கோவில்விளை, நத்தகுளம் ஆகிய ஊர்களில் இருந்து அந்த வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவார்கள். 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் டியூசன் படித்துவிட்டு இரவு 7.30 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். ஆனால், அந்த சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுரேஷ் ஜவஹர், ராணிமகாராஜாபுரம்.
ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 33-வது வார்டு இக்பால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் மருத்துவ வசதி பெறுவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேகுதுமான், கடையநல்லூர்.
கடந்தை வண்டுகள் அகற்றப்படுமா?
கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி அரசு ஆஸ்பத்திரி காம்பவுண்டு பகுதியில் அமைந்துள்ள மரத்தில் கடந்தை வண்டுகள் கூடு கட்டி உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை கடித்து விரட்டுகிறது. எனவே மரத்தில் கூடு கட்டியுள்ள கடந்தை வண்டுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
சுப்பிரமணியன், ஆய்க்குடி.
வாறுகால் வசதி
கடையம் யூனியன் சோ்வைக்காரன்பட்டி பஞ்சாயத்தில் வாறுகால்கள் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் வசதி ஏற்படுத்தி, கழிவுநீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
மாரிமுத்து, கடையம்.
வேகத்தடையின் மீது வர்ணம்
ஆலங்குளம் ஊர் எல்கையின் அருகே பெட்ரோல் பங்கை கடந்து சென்றதும் சாலையில் அமைந்துள்ள வேகத்தடை மிகவும் உயரமாக காணப்படுகிறது. அதன் மீது வர்ணம் எதுவும் பூசப்படாததால், வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே வேகத்தடையின் உயரத்தை சற்று குறைத்து, அதன் மீது வர்ணம் பூச வேண்டும். அருகே வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை பலகையும் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரசேகர், ஆலங்குளம்.
தெரு விளக்குகள் எரியவில்லை
ஆலங்குளம் தாலுகா கடையத்தில் இருந்து செக்கடி ஊர் வரை மெயின் ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் டியூசன் சென்று வரும் மாணவ-மாணவிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே தெரு விளக்குகள் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், கடையம்.