'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-05 12:19 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா அனைக்கரை பஞ்சாயத்து ரம்மதபுரம் ஊரின் நடுவே பள்ளிக்கூடம் மற்றும் ஆலயம் அருகே மின் இணைப்பு பெட்டி ஆபத்தான நிலையில் திறந்து கிடந்தது. இதுகுறித்து ரம்மதபுரத்தை சேர்ந்த சுடலைமணி என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டி மூடி சரிசெய்து உள்ளனர். எனவே கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

தெரு விளக்கு எரியுமா?

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காடுதுலா விலக்கில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. மின்கம்பத்தில் ெவறும் கம்பி மட்டும்தான் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பஸ் நிலையத்தில் சேதம் அடைந்த இருக்கைகள்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இரும்பாலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இருக்கைகள் ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அமருவதற்கு சிரமமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கைகளை சரிசெய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சண்முகவேல், பெருமாள்புரம்.

குண்டும், குழியுமான சாலை

சேரன்மாதேவி முதல் கல்லிடைக்குறிச்சி வரை சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது பலத்த காற்று வீசுவதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

ராமசுப்பிரமணியன், கூனியூர்.

மரக்கிளை வெட்டப்படுமா?

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் பகுதியில் அரசமரத்தின் கிளைகள் அருகில் மின்கம்பிகளை செல்கிறது. இந்த பகுதியானது ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். தற்போது பலத்த காற்று வீசுவதால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்த மரக்கிளைகளை வெட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுடலை, நெல்லை.

மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இருந்து சாலையின் இடது ஓரத்தில் மண் குவியலாக உள்ளது. இந்த மண் குவியலில் சிக்கி அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மண் குவியலை அகற்ற கேட்டுக் கொள்கிறேன்.

ஈனமுத்து, கே.டி.சி.நகர்.

எரியாத மின்விளக்கு

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து சேர்வைக்காரன்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான மின்கம்பங்கள் உள்ளன. இதில் ஒரு சில மின்கம்பங்களில் மின்விளக்கு எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்ல சிரமமாக உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பொன்சுந்தர், அருணாசலம்பட்டி.

பள்ளிக்கூடத்திற்கு கதவு அமைக்கப்படுமா?

கடையம் யூனியன் பொட்டல்புதூரில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதற்கான பணிகள் நடைபெறும்போது, இந்த பள்ளிக்கூடத்தின் நுழைவுவாயிலில் இருந்த இரும்பு கதவுகள் அகற்றப்பட்டன.

இந்த பணிகள் முடிந்தும், அகற்றப்பட்ட கதவுகள் மட்டும் அமைக்கப்படாமல் பள்ளிக்கூடம் நுழைவு பகுதியில் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் ஆடு, மாடுகள் பள்ளிக்கூடத்தில் நுழையும் அவலம் உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி நுழைவு பகுதியில் கதவுகள் அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குமரன், கடையம்.

புகாருக்கு தீர்வு; புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கார்த்திகைபட்டி கிராமத்தில் மின்கம்பம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைத்து உள்ளனர். எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்