தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து ஏற்படும் அபாயம்
அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் நகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜீவ் நகர் வரை அமைந்துள்ள தடுப்பு சுவரின் இரு புறமும் மணல் அதிகளவில் குவிந்துள்ளன. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்கள் வேகமாக செல்லும்போது மணல் காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களை கண்டறிய முடியாமல் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பெரிய அளவிலான விபத்து ஏற்படும் முன் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஹவுசிங்போர்டு,அரியலூர்.
சாலை அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அம்பேத்கர் தெருவின் முகப்பில் மூப்பனார் கோவில் உள்ளது. கோவில் முன்புறம் மழை பெய்தால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இவ்வழியாகவே பஸ்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் செல்கின்றன. மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. மேலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அன்னமங்கலம், பெரம்பலூர்.