வேதாரண்யம் மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
புயல் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் மீனவர்கள் நேற்று 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் மீனவர்கள் நேற்று 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடிக்க செல்லவில்லை
வங்கக்கடலில் மோகா புயல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் நேற்று 6-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
பாதுகாப்பான இடங்களில்...
வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகு மூலமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து இவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை பகுதியில் நேற்று காலை முதலே ஏராளமான மீனவர்கள் டிராக்டர் மூலமாக தங்கள் படகுகளை கடற்கரையில் இருந்து ெவகுதூரம் இழுத்துச்சென்று பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடிய கடற்கரை
வேதாரண்யம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வேதாரண்யம் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இதனிடையே கடற்கரை ஓரம் சில மீனவர்கள் வலை விரித்து மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தற்போது புயல் எச்சரிக்கையால் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்வரத்து இல்லாத நிலையில் கரையோரம் பிடிக்கப்படும் சிறிய வகை மீன்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.