சென்னையில் அரிதாகிவிட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் - பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னையில் அரிதாகிவிட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-05 07:19 GMT

காலமாற்றத்துக்கு ஏற்ப போக்குவரத்திலும் வசதியும், வேகமும் ஏற்பட்டுவருகிறது. நமது முந்தையகால குறுகிய தூர போக்குவரத்து சாதனங்களில் ஒன்று, சைக்கிள் ரிக்‌ஷா. 1880-களில் சிங்கப்பூரில் உருவானதுதான் இந்த முச்சக்கர வாகனம்.

அந்த நாட்டில் 1929-ம் ஆண்டுகளில் இருந்து பரவலாக சைக்கிள் ரிக்‌ஷா பயன்படுத்தப்பட்டது. இதன் பரிணாம வளர்ச்சியாக 1950-ம் ஆண்டுகளில் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளிலும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் தங்களது பயணத்தை தொடங்கின. 1980-ம் ஆண்டுகளில் உலக அளவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழக தலைநகர் சென்னையில் அந்த காலகட்டத்தில்தான் இவை மிகவும் பிரபலமாகின. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே சைக்கிள் ரிக்‌ஷாக்கள் திகழ்ந்தன.

பயணிகளிடம் மவுசு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், பாரிமுனை பஸ் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மூன்று சக்கர சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அணிவகுத்து நிற்கும். பயணிகளை பின் இருக்கையில் ஒய்யாரமாக அமரவைத்து, 'பெடலை' அழுத்தி அழுத்தி மிதித்து சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளி அழைத்துச் செல்வார். அந்த காலகட்டத்தில் சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கு உள்ளூர் மக்களிடம் அதிக மவுசு காணப்பட்டது. சுற்றுலா வரும் வெளிநாட்டினரும்கூட சைக்கிள் ரிக்‌ஷாக்களில் 'ரிலாக்சாக' அமர்ந்து இடங்களை ரசித்தபடி செல்வார்கள்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் ஆட்டோக்கள், மோட்டார்சைக்கிள்கள், கார்கள், பஸ்கள் என புதுப்புது வாகனங்கள் பயணிகளின் போக்குவரத்தில் அவதாரம் எடுத்தன. சைக்கிள் ரிக்‌ஷாக்களில் செல்வதை சிலர் கவுரவ குறைச்சலாகவும் கருதினார்கள். அதன் பயன்பாடு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. சைக்கிள் ரிக்‌ஷா நவீன வடிவம் பெற்றாலும், இழந்த 'செல்வாக்கை' மீட்டெடுக்க முடியவில்லை.

இப்போதும்...

சென்னையை பொறுத்தமட்டில் சென்டிரல் ரெயில் நிலையத்தை ஒட்டிய வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை, பூக்கடை, தங்கசாலை, மயிலாப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இப்போதும் உலா வருகின்றன. ஆட்டோ, கார், லோடு லாரி, கனரக வாகனங்கள் செல்லமுடியாத மிகவும் குறுகலான தெரு, சாலைகளில் உள்ள கடைகளுக்கு பஸ், ரெயில் நிலையம் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் இருந்து பார்சல்களை ஏற்றிச் செல்வதற்கும், குறைந்த தொலைவிலான இடங்களுக்கு செல்வதற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும் என மிகவும் குறைவானவர்களே சைக்கிள் ரிக்‌ஷா சேவையை இப்போது பயன்படுத்துகின்றனர்.

போதிய வருவாய் இல்லாததால் சைக்கிள் ரிக்‌ஷா தொழிலில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் ஒரு சில இடங்களை தவிர்த்து சென்னையில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் காணக்கிடைக்காத அரிய ஒன்றாகிவிட்டது. சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிவந்த பலர் அதைக் கைவிட்டு வேறு வேலை தேடிச் சென்றுவிட்டனர். வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை பஸ் நிலையம் எதிரே உள்ள சாலை என சில இடங்களில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் பூட்டியநிலையில் துருப்பிடித்துக் கிடப்பதை காணமுடிகிறது.

சவாரி இல்லை



இதுகுறித்து சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளி ராஜா கூறியதாவது:-

நான் 35 வருடங்களாக சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிவருகிறேன். ஆட்டோ வந்ததால் எங்கள் சவாரி குறைந்துவிட்டது. ஷேர் ஆட்டோ சவாரியை கால்டாக்சியும், எங்கள் சவாரியை ஆட்டோவும் எடுத்து சென்றுவிட்டன. எப்போதாவது கிடைக்கும் வருமானம் குடும்பம் நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. இதனால் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் வேறு வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு எங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

விரும்பி பயன்படுத்துகிறேன்



தனது தாயாருடன் சைக்கிள் ரிக்‌ஷாவில் பயணம் செய்த குஷ்பு கூறியதாவது:-

ஆட்டோக்களில் குறைவான தூரம் செல்வதற்குக்கூட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். சின்னச் சின்ன தெருக்களுக்கு ஆட்டோக்கள் வருவது இல்லை. இதனால் நாங்கள் குறைந்த தூர போக்குவரத்து தேவைகளுக்காக சைக்கிள் ரிக்‌ஷாவையே எப்போதும் விரும்புகிறோம். எங்களுடைய அன்றாட போக்குவரத்தில் சைக்கிள் ரிக்‌ஷா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை நடத்தமுடியாது என்பது வருத்தம் அளிக்கிறது.

சாப்பாட்டுக்கே ஓடாது



சைக்கிள் ரிக்‌ஷா தொழிலாளி கண்ணன்:-

50 வருடங்களுக்கும் மேலாக நான் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி வருகிறேன். முந்தைய காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம், 2 ஆயிரம் என வருமானம் கிடைத்தது. ஆனால் இப்போது ஒருவேளை சாப்பாட்டுக்கு, அதாவது ரூ.100-க்கு ஓடுவதே மிகவும் அரிதாக இருக்கிறது. பயணிகளை அழைத்துச்செல்லவும், பொருட்களை ஏற்றிச்செல்லவும் நாங்கள் ரூ.50 கேட்டால், ஆட்டோக்காரர்கள் முந்திக்கொண்டு அந்த தொகைக்கு எங்கள் சவாரியை தட்டிப் பறித்துவிடுகிறார்கள். அன்றாட குடும்ப செலவுக்கே கஷ்டமாக இருக்கிறது. சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கு லைசென்சு வழங்குவதையும் இப்போது நிறுத்திவிட்டார்கள்.

அரசு உதவி செய்யவேண்டும்


சைக்கிள் ரிக்‌ஷா பயணி ரெய்ஸூ ஜெயின்:-

குறுகலான தெருக்களில் சைக்கிள் ரிக்‌ஷாக்களில்தான் சவுகரியமாக பயணிக்கமுடியும். காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு, மூத்த குடிமக்களை அழைத்துச் செல்வதற்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்வதற்கு என பல்வேறு சின்னச் சின்ன பயண தேவைகளுக்கு சைக்கிள் ரிக்‌ஷாக்கள் உதவி வருகின்றன. சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு அவர்களுக்கு அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

இடவசதியை அதிகரிக்கவேண்டும்


சைக்கிள் ரிக்‌ஷாவில் அன்றாடம் பயணித்துவரும் அசோக்:-

போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருக்களில் செல்வதற்கு சைக்கிள் ரிக்‌ஷாதான் நல்ல தேர்வாகும். அதிக தூரம் நடந்து செல்வதற்குப் பதிலாக, சைக்கிள் ரிக்‌ஷாவில் செல்வது இதமாக இருக்கிறது. இதில் 2 பேர்தான் பயணிக்கமுடிகிறது. எனவே கூடுதலானோர் செல்லும் வகையில் இதன் இருக்கைகளை அகலப்படுத்தினால் நன்றாக இருக்கும். குறுகிய தெருக்கள், சாலைகளில் செல்வதற்கு டெல்லியில் இருப்பது போன்று இ-ரிக்‌ஷாக்களை அறிமுகம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'கை ரிக்‌ஷாக்களை' ஒழித்த கருணாநிதி



சென்னை மற்றும் அதையொட்டி பகுதிகளில் 1970-ம் ஆண்டுகளில் வரை ஆயிரக்கணக்கான கை ரிக்‌ஷாக்கள் ஓடிக்கொண்டிருந்தன. பயணியை இருக்கையில் அமர வைத்து, தொழிலாளி தன்னுடைய உடலின் சக்தி முழுவதையும் பயன்படுத்தி கை ரிக்‌ஷாவை வீதிகளில் இழுத்துச்செல்வார். கோரத் தாண்டவம் ஆடும் சூரியன் உச்சி மண்டையை பிளக்கும்போதும், மதியநேர சாலைகள் கனலாய் கொதிக்கும்போதும் கை ரிக்‌ஷாக்காரர் களைப்பு தெரியாமலிருக்க ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே இயல்பாக நகர்த்திச் செல்வார். பார்ப்பவர் எவரையும் இந்தக் காட்சி உருக வைத்துவிடும்.

மனிதனை மனிதன் இழுத்துச்செல்லும் இந்த முறைக்கு முடிவுரை எழுதினார், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 1973-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி (கருணாநிதியின் பிறந்த நாள்) கை ரிக்‌ஷாக்களை ஒழித்ததோடு, அதன் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுடன், சைக்கிள் ரிக்‌ஷாக்களையும் இலவசமாக வழங்கினார். இதனால் கை ரிக்‌ஷாக்களை ஒழித்துக்கட்டிய மனிதநேயராக இந்த தொழிலாளர்கள் மனதில் கருணாநிதி நிலைத்திருக்கிறார்.

சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களுக்கு பெருமை தேடித்தந்த எம்.ஜி.ஆர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நடித்த 'ரிக்‌ஷாக்காரன்' படம் கடந்த 1971-ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் ரிக்‌ஷாக்காரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தத்ரூபமாக நடித்து அசத்தியிருப்பார். ரிக்‌ஷாக்காரர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இந்தப் படத்தின் காட்சிகள் அமைந்திருக்கும். இந்த படம் வெளியானபிறகு, ரிக்‌ஷாக்காரர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மவுசு கூடியது.

'ரிக்‌ஷாக்காரன்' படம் எம்.ஜி.ஆருக்கும் தேசிய விருதை பெற்றுத்தந்தது. உடல் உழைப்பு ஒன்றையே மூலதனமாக கொண்டு வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்தும் ரிக்‌ஷாக்காரர்களை எம்.ஜி.ஆர். பெருமைப்படுத்தினார்.

அந்தப் படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரும் அவரைப் போன்ற உடை அலங்காரத்தில் ரிக்‌ஷாக்களை ஓட்டினார்கள். தற்போது சைக்கிள் ரிக்‌ஷா தொழில் தேய்வடைந்துவிட்டாலும், எம்.ஜி.ஆர். மீதான சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களின் அபிமானம் மட்டும் மறையவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்