ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு வெட்டு; வாலிபர் கைது

பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-02-25 22:03 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள கற்றுவாயில் இருந்து மார்த்தாண்டத்துக்கு நேற்று காலையில் ஒரு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அதில் அருமனையை சேர்ந்த விஜயன் (வயது 59) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.

அந்த பஸ் குஞ்சாலுவிளைக்கு வந்த போது வாலிபர் ஒருவர் ஏறினார். பின்னர் கண்டக்டரிடம் ரூ.100 கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டு அவர் இருக்கையில் அமர்ந்தார். அப்போது கண்டக்டரும் அவருடைய பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்.

இந்தநிலையில் கண்டக்டர் மீதி பணத்தை தனது இருக்கையில் அமர்ந்து கொண்டே அந்த வாலிபரிடம் சில்லறை கொடுத்தார். உடனே அந்த வாலிபர், 'பணத்தை உட்கார்ந்து தான் கொடுக்கனுமா?, எழுந்து வந்து கொடுக்க மாட்டாயா?' என கேட்டு தகராறு செய்தார். இதனை கண்டும் காணாமல் கண்டக்டர் விஜயன் இருந்தார். பின்னர் அந்த பஸ் அருமனை சந்திப்பு பகுதியில் வந்த போது அந்த வாலிபர் மீண்டும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் திடீரென கையில் இருந்த கத்தியால் கண்டக்டரின் தலை பகுதியில் வெட்டிவிட்டு இறங்கி ஓடினார். உடனே அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் அந்த நபரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரை அருமனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருவட்டாரை சேர்ந்த தொழிலாளி மெல்பின் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காயமடைந்த கண்டக்டர் விஜயன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags:    

மேலும் செய்திகள்