காதல் தகராறில் ஐ.டி.ஊழியருக்கு அரிவாள் வெட்டு
காதல் தகராறில் ஐ.டி.ஊழியருக்கு அரிவாள் வெட்டு
கோவை
காதல் விவகாரத்தில் ஐ.டி. ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைதானார்.
காதல் தகராறு
கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் ஜெரால்டு. இவருடையமகன் சார்லஸ் மரிய ஜான் (வயது 22). இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திஜி ரோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
இளம்பெண்ணுக்கு ஒரு தங்கை உள்ளார். அவரை அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மதன்குமார் (28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இவர் அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து அவர் தனது அக்காளிடம் தெரிவித்தார். அவர் தனது காதலன் சார்லஸ் மரிய ஜானிடம் கூறினார். இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் மதன்குமாரை சந்தித்து எனது காதலியின் தங்கைக்கு உன்னை பிடிக்கவில்லை. எனவே அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்தி கொள்ளவும் என கூறினார்.
அரிவாள் வெட்டு
சம்பவத்தன்று சார்லஸ் மரிய ஜான் தனது மோட்டார் சைக்கிளில் சுந்தராபுரம் ஆசிரியர் காலனி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மதன்குமார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். பின்னர் "நீ மட்டும் அக்காளை காதலிக்கலாம், நான் அவரது தங்கையை காதலிக்க கூடாதா?" என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார் அரிவாளை எடுத்து சார்லஸ் மரிய ஜான் தலையில் வெட்டினார். மேலும் கையில் குத்தி கிழித்தார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தகராறில் ஐ.டி. ஊழியரை வெட்டிய மதன்குமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.