ஓசூர்:-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பேடரப்பள்ளி நேதாஜி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி கமலா (23). தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சுரேஷ், கமலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்து வந்தார்.
அரிவாள் வெட்டு
நேற்று முன்தினம் மாலை கமலா கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிளில் உள்ள தனது உறவினர் வீட்டு முன்பு இருந்த போது அங்கு சுரேஷ் வந்தார். அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி கமலாவை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த கமலா சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கமலா கொடுத்த புகாரின் பேரில் சுரேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.