மது வாங்க கொடுத்த பணத்தை செலவு செய்த நண்பனுக்கு தலையில் வெட்டு
காயமடைந்த வாலிபர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சக்திவேல் மகன் விநாயகம் என்ற விநாயகமூர்த்தி (வயது 25). இவரும், திருவதிகை ஆயில்மில் தெருவை சேர்ந்த பஞ்சநாதன் மகன் பன்னீர் என்ற பன்னீர்செல்வம் (34) என்பவரும் நண்பர்கள் ஆவர்.
சம்பவத்தன்று பன்னீர்செல்வம், விநாயகமூர்த்தியிடம் ரூ.300-யை கொடுத்து மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் விநாயகமூர்த்தி மதுபாட்டில் வாங்கி வராமல் அந்த பணத்தை செலவு செய்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பன்னீர்செல்வம், விநாயகமூர்த்தியிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விநாயகமூர்த்தியின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பன்னீர்செல்வம் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.