சடையாண்டி கோவிலில் ஆடுகளை பலியிட்டு விடிய, விடிய கறி விருந்து
பட்டிவீரன்பட்டி அருகே மழை வேண்டி சடையாண்டி கோவிலில் ஆடுகளை பலியிட்டு விடிய, விடிய கறிவிருந்து நடந்தது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.;
சடையாண்டி கோவில்
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி ஆற்றின் கரையோரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளி உள்ள சடையாண்டிசாமி ஊரின் காவல் தெய்வமாக திகழ்கிறார்.
விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், மக்கள் நோயின்றி வாழவும் சடையாண்டிசாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது.
இதையொட்டி அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, பக்தர்கள் புடைசூழ, முக்கிய வீதிகளின் வழியாக மருதாநதி ஆற்றின் கரையில் உள்ள சடையாண்டி கோவிலுக்கு சாமி பெட்டி எடுத்து வரப்பட்டது. அதன்பின்னர் சாமி பெட்டிக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டது.
விடிய, விடிய விருந்து
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. இந்த ஆடுகள் அனைத்தும் இறைச்சியாக்கப்பட்டு பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டது.
அதன்பின்பு சடையாண்டிசாமிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சடையாண்டி சாமியை தரிசனம் செய்தனர்.
பூஜை முடிந்தவுடன் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விடிய, விடிய கறி விருந்து நடந்தது. பெரிய உருண்டைகளாக பிடிக்கப்பட்ட சோறுடன், எலும்பு குழம்பு, மட்டன் வருவல் ஆகியவை பக்தர்களுக்கு பரிமாறப்பட்டன.
சிறப்பு வாய்ந்த இந்த திருவிழாவில், அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.
நோய் நொடியின்றி வாழ...
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், அய்யம்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதனால் விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், நோய் நொடியின்றி மக்கள் வாழவும் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. காவல் தெய்வமான சடையாண்டி கோவிலில் திருவிழா முடிந்தவுடன், அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடத்துவது ஐதீகம். அதன்படி பெரியமுத்தாலம்மன் கோவிலில் சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது என்றனர்.