அருங்காட்சியக வளாகத்தில் கலாசார திருவிழா
அருங்காட்சியக வளாகத்தில் கலாசார திருவிழா
தஞ்சை அருங்காட்சியக வளாகத்தில் கலாசார திருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது.
கலாசார திருவிழா
தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் கலாசார திருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி கலாசார திருவிழா நேற்று தொடங்கியது.
இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த கலைவிழா வருகிற 29-ந்தேதி வரை நடைபெறுகிறது.தினமும் மாலை 6.30 மணிக்கு கலை விழா தொடங்கி இரவு 8.20 மணி வரை நடைபெறுகிறது.
கிராமிய கலை நிகழ்ச்சி
இத்திருவிழாவில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நடனப் பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளும், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளும், கல்லூரி கல்வி இயக்ககத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தஞ்சை மாநகராட்சி சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சியும், கலை பண்பாட்டு துறை சார்பில் சிறப்பு கிராமிய கலை நிகழ்ச்சியும் நாள்தோறும் நடைபெறுகிறது.
நேற்று நடராஜா நாட்டிய குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, நடுவூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் மேற்கத்திய குழு நடனம், குலமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம், கள்ளப் பெரம்பூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவியின் நாட்டுப்புற பாடல், கும்பகோணம் அன்னை கலை கல்லூரியில் கொக்காலிக்கட்டை ஆட்டம், மயிலாட்டம், கரகாட்டம், துளசிராமன் குழுவினரின் சிலம்பாட்டம், தேன்மொழி ராஜேந்திரனின் கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகன், இன்டாக் கவுரவ செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.