கோடை மழை ஈரத்தைப் பயன்படுத்தி கோடை உழவு செய்யுங்கள்

கோடை மழை ஈரத்தைப் பயன்படுத்தி கோடை உழவு செய்யுங்கள்

Update: 2023-05-02 10:54 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் தற்போது பெய்துள்ள மழையின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறுமாறு வேளாண்மைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பயிர் பாதுகாப்பு

இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது'களைக்கட்டுப்பாடு, பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு இவை 3 ம் முக்கிய பயிர் பாதுகாப்பு நடைமுறைகளாகும்.இவற்றுக்காகவே விவசாயிகள் அதிக அளவில் செலவு செய்யும் நிலை உள்ளது.ஆனால் பெரிய அளவில் செலவு இல்லாமல், ரசாயனங்கள் பயன்பாடு எதுவும் இல்லாமல் பயிர் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன் மண் வளத்தை பாதுகாப்பதிலும் கோடை உழவு பெரும்பங்கு வகிக்கிறது.இதன் மூலம் ரசாயனங்களின் பயன்பாடு குறைந்து மண் மலடாவது, காற்று, நீர் மாசுபாடு போன்றவை பெருமளவு குறைகிறது.மடத்துக்குளம் பகுதியில் தற்போது கோடை மழை பெய்து மண் ஈரப்பதத்துடன் உள்ளது.இந்த ஈரப்பதத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அறுவடைக்குப்பின் காலியாக உள்ள நிலத்தில் கோடை உழவு செய்ய வேண்டும்.இவ்வாறு ஆழமாக உழுவதன் மூலம் மேல் மண் கீழாகவும், கீழ் மண் மேலாகவும் புரட்டப்படுகிறது.இதனால் மண்ணின் இறுக்கம் தளர்ந்து பொலபொலப்பாகிறது.மேலும் காற்றோட்டம் அதிகரிப்பதுடன் மண்ணின் நீர்ப்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது.மண் அரிமானம் தடுக்கப்பட்டு மண்ணில் இடப்பட்ட சத்துக்கள் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

கூட்டுப்புழுக்கள்

முந்தைய சாகுபடியில் எஞ்சிய தூர்கள் மக்கி உரமாகிறது.மேலும் களைகள் வேருடன் பிடுங்கி அழிக்கப்படுவதுடன் அதுவே மண்ணுக்கு உரமாகிறது.இதனால் களைக்கொல்லிகளின் பயன்பாடு குறைவதுடன் அடுத்த சாகுபடியின் போது பிரதான பயிருக்கு களைகள் இடையூறு ஏற்படுத்துவது குறைகிறது.மேலும் கடந்த சாகுபடியின் போது மண்ணில் தங்கிய கூட்டுப்புழுக்கள், பூச்சிகளின் முட்டைகள் போன்றவை கோடை உழவால் வெளியேற்றப்படுகின்றன.அவை கோடை வெப்பத்தால் அழிவதுடன், பறவைகளுக்கு இரையாகிறதுஅத்துடன் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாவதற்கு காரணமான பூஞ்சாணங்கள் மற்றும் பூஞ்சாண வித்துக்கள் அழிக்கப்படுகின்றன.அடுத்த சாகுபடியின் போது பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகரித்து அதிக தூர்கள், அதிக கிளைகள் மட்டுமல்லாமல் அதிக விளைச்சல் கிடைக்கவும் கோடை உழவால் வந்த மண்ணின் பொலபொலப்பு கைகொடுக்கும்.எனவே விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும்'என்று வேளாண்மைத்துறையினர் கூறினர்.



Tags:    

மேலும் செய்திகள்