மரவள்ளிக்கு ஊடுபயிராக கஞ்சா சாகுபடி; விவசாயி கைது

கல்வராயன்மலையில் மரவள்ளிக்கு ஊடு பயிராக கஞ்சா சாகுபடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-06 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

சாராயம் விற்பனை

கல்வராயன்மலை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இங்குள்ள ஓடைகளில் பாய்ந்தோடும் தண்ணீரை பயன்படுத்தி மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சி உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை போலீசாரும், வனத்துறையினரும் வாகனசோதனை மற்றும் சாராய வேட்டை நடத்தி பிடித்து வருகிறார்கள். இருப்பினும் அதிகாரிகள் கண்களில் மண்ணை தூவிக்கொண்டு மர்ம நபர்கள் சிலர் சாராயம் காய்ச்சி கடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசாரின் சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கல்வராயன்மலைப்பகுதியிலும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் களம் இறங்கி சாராய வியாபாரிகள், காய்ச்சுபவர்களை கைது செய்து வந்தனர். போலீசுக்கு பயந்து சில சாராய வியாபாரிகள், காய்ச்சுபவர்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடிய சம்பவமும் நிகழ்ந்தது.

கஞ்சா சாகுபடி

போலீஸ் கெடுபிடிக்கு பயந்து சில வியாபாரிகள் சாராயத்துக்கு மாற்றாக கஞ்சா விற்பனையில் களம் இறங்கினர். இதற்காக கல்வராயன் மலைப்பகுதியில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட தொடங்கினர். சில மாதங்களுக்கு முன்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்வராயன்மலையில் கஞ்சா சாகுபடி செய்ததை கண்டுபிடித்த போலீசார் கஞ்சா செடிகளை அழித்தனர். இந்த நிலையில் கல்வராயன்மலை பெரியபலாப்பூண்டி பகுதியில் கஞ்சா சாகுபடி செய்துள்ளதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஒரு தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மரவள்ளி பயிருக்கு ஊடு பயிராக கஞ்சா சாகுபடி செய்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

விவசாயி கைது

இதையடுத்து அந்த தோட்டத்தின் உரிமையாளர் ஆண்டி(வயது 65) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது மரவள்ளிபயிரின் இலையை போன்று கஞ்சா செடியின் இலையும் இருக்கும் என்பதாலும், அதை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதாலும் கஞ்சா சாகுபடி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆண்டியை போலீசார் கைதுசெய்தனர். மேலும் நிலத்தில் சாகுபடி செய்த கஞ்சா செடிகளை போலீசார் பிடுங்கி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்