கடலூர், விருத்தாசலத்தில் விரைவில் புதிய பஸ் நிலையம்

கடலூர், விருத்தாசலத்தில் விரைவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.;

Update: 2022-12-02 18:45 GMT

புதிய பஸ் நிலையம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கடலூர் பகுதிக்கு பஸ் நிலையத்தை எங்கு கட்டுவது என்பது தொடர்பாக பிரச்சினை உள்ளதால், இதுவரை தொடங்கப்படவில்லை. விருத்தாசலம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நிறைவேற்றப்படும்.

ரூ.479 கோடி

திட்டக்குடி மற்றும் வடலூர் நகராட்சிகளுக்கும், பெண்ணாடம், மங்கலம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் பேரூராட்சிகளுக்கும், மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் ஒன்றியங்களை சேர்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கும் நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாக கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.479 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது 68 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. இப்பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடைந்து விடும். இதன் மூலம் 39.43 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் பராமரிப்பில் உள்ள 11 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் மறுசீரமைப்பு பணிகள் செய்ய ரூ.73.43 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 5 திட்டங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. மீதமுள்ள 6 பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பரிசீலனையில் உள்ளன.

கூட்டுக்குடிநீா் திட்டம்

சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை, குமராட்சி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கும் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்டு கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு ரூ.255 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரம் உறுதி செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட உள்ளது

மேலும் கடலூரிலும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாதாள சாக்கடை

மாநகராட்சியில் குப்பை கிடங்கு அமைக்க 40 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாதை வசதி இல்லாததால், பாதை அமைப்பதற்கு நிதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நிதி ஒதுக்கப்பட்டதும், குப்பை கிடங்கு செயல்பாட்டுக்கு வரும். பாதாள சாக்கடை அமைப்பது என்பது சாலை அமைப்பது, கட்டிடம் கட்டுவது போன்று எளிதான காரியம் அல்ல. குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே அந்த வேலையை பார்க்க முடியும். அவர்களை வைத்துக் கொண்டுதான் வேலையை பார்க்க முடியும்.

அதனால் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் பல இடங்களில் போடப்பட்ட பாதாள சாக்கடை சேதமடைந்துள்ளதால், அதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில இடங்களில் பாதாள சாக்கடைக்காக மதிப்பீடு செய்யப்பட்டு, நிதிக்காக காத்திருக்கிறோம். நிதி வந்ததும் பணிகள் தொடங்கும். கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக முத்தரப்பு கூட்டம் நடத்திய பிறகே, பஸ் நிலையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், ரமேஷ் எம்.பி., கலெக்டர் பாலசுப்பிரமணியம், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்