கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி காதல் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் விரக்தி

காதல் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றார்.

Update: 2023-10-03 18:45 GMT

கடலூர் அருகே உள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவருக்கும், நத்தப்பட்டை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம், நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அந்த வாலிபர், வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதை நம்பிய வினோத்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். மேலும் தனது பெயரையும், காதலன் விருப்பத்திற்கு ஏற்ப வினோதினி என மாற்றிக் கொண்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பாலூரில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல்

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர், வினோதினியுடன் குடும்பம் நடத்த மறுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த வினோதினி, அந்த வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, பாலூர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் 3-ந் தேதி (அதாவது நேற்று) பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில் வினோதினி, நேற்று காலை ஊர் பஞ்சாயத்துக்கு புறப்பட்ட போது அந்த வாலிபரின் உறவினர்கள் அவரை தடுத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர், நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.

தீக்குளிக்க முயற்சி

பின்னர் அவர், தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து காயமடைந்த வினோதினி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்