கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் மட்டும் போதாது; விசாரணை வேண்டும் - அண்ணாமலை

மணல் எடுத்தவர் உரிமம் பெற்றிருந்தாரா என்பதை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2022-06-06 10:00 GMT

சென்னை,

கடலூர் அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.

இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். சத்தம்கேட்டு திரண்ட கிராம மக்கள், உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆற்றில் மூழ்கி உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் மட்டும் கொடுத்துவிட்டு செல்லாமல் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் என்று தெரியாது குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள செய்தி சோகத்தை அளிக்கிறது

அவர்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தமிழக பாஜகவின் ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும். இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் மட்டும் கொடுத்துவிட்டுக் கடந்த செல்லாமல், மணல் எடுத்தவர் யார், உரிமம் பெற்றிருந்தாரா என்பதனை விசாரித்து தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்!" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்